பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 66 -74

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 66 (473) வானர பர்யவஸ்தாபனம்(வானரங்களின் தடுமாற்றமும், திரும்ப நிலை நிறுத்துதலும்)

 

லங்கையின் ப்ராகாரங்களைக் கடந்து, நகரத்தின் வெளி வாசலில் இருந்து வெளிப்பட்டான். வரும் பொழுதே, இடி போன்ற தன் குரலில் ஜய கோஷம் செய்து கொண்டே வந்தான். சமுத்திரத்தின் அலை ஓசையையும் மீறி அவன் குரல் கேட்டது. இந்திரனால் அவனை கொல்ல முடியாது. யமனும், வருணனும் அதே போல இவனை கொல்ல சக்தியற்றவர்களே. அவனுடைய பயங்கரமான கண்களைக் கண்டே ஓட்டம் பிடித்தன, வானரங்கள். ஓடும் வீரர்களைத் தடுத்து, கட்டுப் படுத்தி யுத்த பூமியில் நிற்க வைக்க, அங்கதன் அரும் பாடு பட்டான். நலன், நீலன், க3வாக்ஷன், குமுதன் இவர்களை பெயர் சொல்லி அழைத்து, உங்கள் வீர்யம் என்ன? மறந்துவிட்டதா? உங்களை நீங்களே மறந்தது போல ஓடுகிறீர்களே. உங்கள் அன்புக்கு பாத்திரமானவர்களை தனியே விட்டு ஓடலாமா? எங்கு போகிறீர்கள்? சாதாரண காட்டில் திரியும் வானரங்கள் தான் நாங்கள் என்று சொல்வது போல ஓடுகிறீர்களே. சௌம்ய, திரும்பி வாருங்கள். உயிரைக் காப்பாற்றி என்ன பயன்? திடுமென உயிர் ஆசை வந்து விட்டதா? இந்த ராக்ஷஸன் மிகப் பெரிய உருவத்துடன் வந்து நிற்கிறான். இவனுடன் யுத்தம் செய்ய நம்மால் முடியாது என்று பயப்படுகிறீர்களா? வேண்டாம். அந்த பயமே நமக்கு வேண்டாம். பயங்கரமான இந்த ராக்ஷஸ சைன்யத்துடன் போரிடத் தான் நாம் வந்தோம். நம் புஜ பலத்தால் இவனை வீழ்த்துவோம். வீரர்களே, திரும்பி வாருங்கள். ஆங்காங்கு சிதறிய படை வீரர்களை கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்து, சமாதானப் படுத்தி யுத்தத்தில் ஈடுபடச் செய்தான். அவர்களும் கைகளில் மரங்களை எடுத்துக் கொண்டு போர் முனைக்குத் திரும்பின. வந்து, மதம் பிடித்த யானைகள் போல எல்லாமாக சேர்ந்து கும்பகர்ணனை தாக்கின.  மலைச் சிகரங்கள் போல இருந்த பெரிய பாறாங்கற்கள், நுனியில் பூக்களுடன் கூடிய மரக் கிளைகள், இவற்றால் அடித்தன. அசைக்க முடியவில்லை. அவன் சரீரத்தில் பட்ட பாறைகளே சிதறி சுக்கு நூறாக விழுந்தன. பெரிய பெரிய மரங்கள் என்று நினைத்தவை, துண்டு துண்டாக முறிந்து பூமியில் விழுந்தன. அவனும் இதனால் ஆத்திரமடைந்து வானர சைன்யத்தை அடிக்க ஆரம்பித்தான். காட்டுத் தீ வனத்தில் மரங்களை அழிப்பது போல வானர வீரர்களின் கூட்டத்தில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கினான். தங்கள் ரத்தத்திலேயே நனைந்தவர்களாக பல வானரங்கள் அடிபட்டு விழுந்தன. மரங்கள், தாம்ர நிறத்தில் புஷ்பங்களோடு பூமியில் சரிவது போல இருந்தது. தாண்டிக் குதிப்பவர்களும், ஓடுபவர்களும், எங்கும் பார்வையைச் செலுத்தாமல் ஓடிய ஓட்டத்தில், சில சமுத்திரத்தில் விழுந்தன. சில ஆகாயத்தை அடைந்தன. ராக்ஷஸனின் வலிமையான தாக்குதலை எதிர்த்து நிற்கத் திராணியற்று, சாகரத்தைக் கடந்து வந்த வழியே திரும்பிப் போனார்கள். பயத்தில் முகம் வெளிறி, பள்ளங்களில் சில மறைந்து கொண்டன. கரடிகள், மரங்களில் ஏறிக் கொண்டன. சில மலையுச்சியில், ஏறி நின்று கொண்டன.  சில சமுத்திரத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டன.  குகைகளில் நுழைந்து கொண்டன. சில வானரங்கள் பொத்தென்று கீழே விழுந்தன. சில நிற்கவே முடியாமல் திணறின. ஒரு சில பூமியில் விழுந்து இறந்தது போல படுத்துக் கிடந்தன. இவைகளை ஒன்று சேர்க்க அங்கதன் மிகவும் பாடு பட வேண்டியிருந்தது. திரும்பத் திரும்ப அவர்களை ஒன்று கூட்ட சமாதானமாகவும், அறிவுரையாகவும், சொல்லிப் பார்த்தான். நில்லுங்கள். நாம் யுத்தம் செய்யத் தானே வந்தோம். யுத்தம் செய்வோம். வானரர்களே, திரும்பி வாருங்கள். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு எங்கே போவீர்கள்? திரும்ப நாம் ஓரிடத்தில் சந்திக்கத்தானே வேண்டும்?  நாம் வந்த காரியம் இதுவே. திரும்ப வந்து அவரவர் இடத்தில் நில்லுங்கள். இப்படி ஆயுதம் இன்றி, நிராயுத பாணிகளாக பயத்துடன் ஓடுகிறீர்களே. உங்கள் மனைவிகள் பார்த்து சிரிக்கப் போகிறார்கள். உயிர் வாழும் ஜீவன்களுக்கு இது ஒரு பெரிய அவமானம் இல்லையா? நீங்கள் எல்லோரும் நல்ல குலத்தில் பிறந்து வளர்ந்த விதம் என்ன? இப்படி சாதாரண காட்டு வானரம் போல ஓடி ஒளிவது எங்கே? பயப்படுபவன் கோழை இல்லையா? தங்கள் வீரத்தைத் துறந்து ஓடுவது வீரனுக்கு அழகா? நாட்கள் கடந்து நாம் திரும்பிச் சென்ற பின், ஜனங்கள் கூடும் இடத்தில் என்ன பேசிக் கொள்வார்கள். ஓடி வந்து விட்டார்கள் இந்த வானரங்கள், வீரர்களாம் என்று இகழ்ச்சியாகப் பேசிக் கொள்வார்கள்.   கையில் ஜலத்தை எடுத்து, வீரம் பேசி விட்டு பெரிய பெரிய சபதங்கள் செய்து கொண்டு வந்தோமே, அவை என்ன ஆவது? கோழைகளாக, மற்றவர்கள் இகழ, உயிர் விடவா பிறந்தோம்? சத்புருஷர்கள் காட்டிக் கொடுத்த வழியில் போராடுவோம். இந்த பயத்தை விடுங்கள். அடிபட்டு பூமியில் விழுவோம். அல்ப ஜீவிதர்களாக பூமியில் படுத்துக் கிடப்போம். அடைய முடியாத ப்ரும்ம லோகத்தை யுத்த களத்தில் மடிந்து விழுபவர்கள் அடைவார்கள். இந்த சத்ருக்களை யுத்தத்தில் வெற்றி கொண்டால் நல்ல புகழை அடைவோம். இல்லையெனில் வீர சுவர்கம் புகுந்து பல போகங்களை அனுபவிப்போம். கும்பகர்ணன் காகுத்ஸனை நேரில் சந்தித்த பின் உயிருடன் திரும்ப மாட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகள் திரும்ப முடியாதது போல மடிவான். நாம், மகா வீரர்களின் வரிசையில் எண்ணப்படுகிறோம். ஓடிச் சென்று, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா?  இந்த ஒருவன் பலரை அழித்து நம் புகழைக் கெடுக்கிறான். இப்படி சூரனான அங்கதன் சொல்லி, மிகப் பிரயாசையுடன் வானரங்களை திரும்ப ஒன்று சேர்க்க முயன்ற பொழுது, ஓடும் சில வானரங்கள் கோழையாக பதில் சொல்லின. நாங்கள் பயங்கரமான யுத்தம் செய்து விட்டோம். கும்பகர்ணன் எங்களை ஒரு கலக்கு கலக்கி விட்டான். நாங்கள் திரும்ப மாட்டோம். இப்பொழுது உயிர் எங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது.  இப்படிச் சொல்லிக் கொண்டே நாலா திசைகளிலும் ஓடின. பீமன், மிகப் பெரிய உருவம், பயங்கரமான கண்களுமாக வரும் கும்பகர்ணனைக் கண்டு ஓடும் வானரங்களை, தன் கைகளால் தடுத்து நிறுத்தியும், சமாதானமாக பேசியும் அங்கதன் அவர்களை திரும்பி வரச் செய்தான். வாலி புத்திரன் அங்கதன் தலைமையில் தாங்கள் செய்த பிரதிக்ஞை நினைவு வர,  அவர்கள் திரும்பினார்கள். ரிஷபன், சரபன், மைந்தன், த்விவிதன், தூம்ரன், நீலன், குமுதன், சுஷேணன், கவாக்ஷன், ரம்பன், தாரன், பனஸன், வாயு புத்திரன் முதலானோர் வேகமாக ரண பூமியில் ஓடி யுத்தம் செய்யக் கிளம்பினார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வானர பர்யவஸ்தாபனம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 67 (474) கும்பகர்ண வத4: (கும்பகர்ணனின் வதம்)

 

பெருத்த சரீரம் கொண்ட பல வானரங்கள், அங்கதன் சொன்னதைக் கேட்டு, திரும்பி வந்தன. இயல்பான புத்தியும், யுத்தம் செய்ய ஆசையும் அவர்களிடம் திரும்ப வந்து விட்டது போலத் தெரிந்தது. தாங்களே வீர வாக்யங்களைச் சொல்லி ஊக்குவித்துக் கொண்டவர்களாக, திரும்ப தங்கள் அணியில் தங்களுடைய இடங்களில் வந்து நின்று கொண்டனர். மரணம் வந்தால் தான் என்ன என்ற மனப் பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டது. தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டவர்களாக, கும்பகர்ணன் படை வீரர்களுக்கு சமமாக ஈடு கொடுக்கத் தயாராகி விட்டனர். கைக்கு அகப்பட்ட மரக்கிளைகளோ, பாறைகளோ எடுத்துக் கொண்டு விரைந்தனர். நேருக்கு நேர் கும்பகர்ணனுடன் கூட மோதத் தயாராக ஆனார்கள்.

 

ஆத்திரத்துடன் வந்த கும்பகர்ணன், கையில்  க3தை4யுடன், எதிரிகள் படையின் உள்ளே நுழைந்து பலரைத் துன்புறுத்தி வீழ்த்தினான். எழுநூறு, எட்டாயிரம் வானரங்கள், கும்பகர்ணன் காலடியில் மிதி பட்டு மடிந்தன. பதினாறு, எட்டு, பத்து, இருபது, முப்பது என்று கைகளால் கொத்தாக பிடித்து வாயில் போட்டு விழுங்கியபடி, கும்பகர்ணன் நடந்தான். கருடன், பன்னகங்களைப் பார்த்த உடன் விழுங்குவது போல, மிகவும் கோபத்துடன், கண்ட மாத்திரத்தில் வானரங்களை வாயில் போட்டு மென்றான். வானரங்கள் மிகவும் சிரமப்பட்டு, தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பாடுபட்டன. மரக் கிளைகளே ஆயுதமாக, வானரங்கள் யுத்த முனையில் முன்னேறிச் சென்றனர். அச்சமயம், த்விவிதன் என்ற வானரப் படைத் தலைவன், ஒரு பெரிய மலையளவு பாறாங்கல்லை மிகச் சிரமத்துடன்  தூக்கிக் கொண்டு வந்து, கும்பகர்ணன் மேல் வீசினான். அவன் வரை போய் சேராமல் அந்த கல் அவன் சைன்யத்தை தாக்கியது.  சில குதிரைகள், யானைகள், ரதங்களை வீழ்த்தியது. மற்றும் சில ராக்ஷஸர்களும் இது போல கற்களால் தாக்கப் பட்டு குதிரையை, சாரதியை இழந்து, ரத்தம் பெருக நின்றனர்.  வானர ராஜன் கையிலிருந்து வீசப் பெற்ற சரங்கள் பல ரதங்களைத் தாக்க, அவர்களும், காலாந்தகனுக்கு சமமான பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தனர். கைக்கு கிடைத்த மரக் கிளைகளைக் கொண்டு, ரதங்களையும், குதிரைகளையும், ஒட்டகங்களை, ராக்ஷஸர்களை இடை விடாது அடித்தனர். ஹனுமானும், கற்களையும், பலவிதமான மரங்களையும் கும்ப கர்ணனின் தலையில் மழையாக பொழிந்தான். கும்பகர்ணனுடைய  க3தை4 இவற்றை விளையாட்டாகத் தள்ளி விட்டு, பொடிப் பொடியாக்கியது. இதன் பின் கையில் தன்  க3தை4யுடன் வானர சைன்யத்தினுள் நுழைந்த கும்பகர்ணன், கையில் மரக் கிளையுடன் நின்றிருந்த ஹனுமான் முன் சென்றான். பல வானரங்களை துரத்தியடித்தபடி, வந்தான். ஹனுமான் மிகப் பெரிய கல் ஒன்றை எடுத்து அடிக்க, அதனால் உடலில் ரத்தம் பெருகுவதையும் பொருட்படுத்தாமல், அந்த பெரிய கல் போன இடம் தெரியாமல், தன்  க3தை4யால் அடித்து நொறுக்கி விட்டான். ஹனுமானின் புஜங்களுக்கிடையில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். தன் உக்ரமான சக்தியால் குகன், க்ரௌஞ்ச மலையை அடித்தது போல அடித்தான். சூலத்தினால் அடிபட்ட வலி தாங்காமல், நிலை குலைந்து வாயால் ரத்தம் உமிழ்ந்தவனாக ஓவென்று அலறினான். யுகாந்த சமயம் மேகம் இடி முழக்கம் செய்வது போல இருந்தது அந்த அலறல் சத்தம்.  அவ்வாறு ஹனுமான் அடிபட்டு அலறியதை பார்த்த ராக்ஷஸர்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள். வானரங்கள் மேலும் பயந்து ஓடின.

 

திரும்பவும் நீலன் ஓடும் வானரங்களைத் தடுத்து நிறுத்தினான். தன் கையில் இருந்த பாறாங்கல்லால், கும்பகர்ணனை அடித்தான். தன் மேல் விழ இருந்த கல்லை கும்பகர்ணன் தன் முஷ்டியினாலேயே தடுத்து நிறுத்தி விட்டான். அதிலிருந்த நெருப்பு பொறி பறக்க, அந்த கல் பூமியில் விழுந்தது. ரிஷப4ன், சரப4ன், நீலன், க3வாக்ஷன், க3ந்த4 மாத3னன், என்ற ஐந்து வானர வீரர்களும் கும்பகர்ணனை நோக்கி ஓடி வந்தார்கள். கல், மரக் கிளைகள், தங்கள் உள்ளங்கை, கால்கள், முஷ்டி, இவைகள் தான் ஆயுதமாக கும்பகர்ணனை விடாது தாக்கினர். அவனை இடை விடாது துரத்தினர். இவர்கள் ஓங்கி அடித்ததெல்லாம், மலை போல நின்ற அவனது சரீரத்தில் எந்த வித பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பது தெரிந்தது. ஏதோ கையால் ஸ்பரிசித்தது போல, எந்த மாறுதலும் இல்லாமல் நின்றான். ரிஷபன், வானரங்களுள் மிகப் பெரிய உருவம் உடையவன். அவனைக் கும்பகர்ணன் அணைத்துக் கொண்டான். கும்பகர்ணனுடைய புஜங்களுக்கிடையில் சிக்கித் தவித்தான், ரிஷபன். நசுங்கி, ரத்த விளாறாகி, தப்பி குதித்தான். சரபனை முஷ்டியால் அடித்து  முழங்காலால் நீலனைத் தள்ளி விட்டான். இந்திர ரிபுவான கும்பகர்ணன், தன் கைத்தலத்தால் க3வாக்ஷனை ஒரு அறை விட்டான். க3ந்த4 மாத3னனை கால்களால் இடறி விட்டான். இந்த அடிகளை தாங்க மாட்டாமல், எல்லா வானர வீரர்களும் பூமியில் விழுந்தனர். அடியோடு வெட்டிச் சாய்த்த கிம்சுக மரம் போல, இந்த முக்யமான வீரர்களை செயலிழக்கச் செய்த பின், கும்பகர்ணன், வானர சைன்யத்தை த்வம்சம் செய்யலானான். ஆயிரக் கணக்கானவர் ஓடினர். பலர் முடிந்தவரை எதிர்த்து பற்களால் கடித்து, நகங்களாலும், முஷ்டிகளாலும், கால்களாலும் அடித்து எதிர்த்து நின்றன. கும்பகர்ணனின் மலை போன்ற சரீரத்தில், ரோமங்கள் போல இந்த வானரங்கள் ஆயிரக் கணக்காக ஏறி நின்றன. ஒரே சமயத்தில் தன் கைகளால் கிடைத்த வரை இவர்களைப் பிடித்து வாயில் போட்டு மென்றான் கும்பகர்ணன், கருடன் பாம்புகளை விழுங்குவது போல. கும்பகர்ணனது பாதாளம் போன்ற வாயில் விழுந்த வானரங்களில் சில நாசித் துவாரங்கள் வழியே வெளியே வந்து விட்டனர். காதுகளிலிருந்தும் சில வெளிப்பட்டன. ஆத்திரமடைந்த ராக்ஷஸன் அவர்களை ஓங்கி கைகளால் அடித்தான். பல வானரங்கள் உருத் தெரியாமல் நசுங்கி விழுந்தன. கீழே பூமி ரத்தச் சேறாக, கும்பகர்ணன் காலாக்னி போல அவர்களுக்கிடையில் அலைந்து திரிந்தான், கையில் வஜ்ரத்தை ஏந்தி இந்திரனும், பாசத்துடன் அந்தகனும், யுத்த பூமியில் சஞ்சரிப்பது போல, சூலம் கையில் ஏந்தி கும்பகர்ணன் பெரும் சேதத்தை விளைவித்தபடி அலைந்தான். உலர்ந்து கிடக்கும் காட்டு மரங்களை நெருப்பு அழிப்பது போலவும், வானரங்கள் கும்பகர்ணன் கையில் அழிந்தன. தங்கள் தலைவர்களும் வழி நடத்திச் செல்ல இயலாத நிலையில், பலமான சேதம் ஏற்பட, வானரங்கள் தலை தெறிக்க தப்பி ஓடவே முயன்றன. கூட்டம் கூட்டமாக கும்பகர்ணன் கையால் அடிபட்டு (கொத்து கொத்தாக பிடித்து வாயில் போட்டு மெல்லப்பட்டு) அலறியடித்துக் கொண்டு ராகவனை சரணம் அடைந்தனர்.

 

இப்படி வானரங்கள் நலிந்து போய் வந்ததைக் கண்டு வஜ்ர ஹஸ்தனான, இந்திரனின் மகனுக்கு மகனான, அங்கதன், தானே கும்பகர்ணனை எதிர் கொள்ள ஓடினான். தன் கையிலிருந்த பெரிய பாறாங்கல்லை அவன் தலையில் வீசினான். அந்த கல் நன்றாக பட்டு காயப்படுத்தவும், கும்பகர்ணன் ஆத்திரமடைந்தான். தாங்க முடியாத கோபத்துடன் வாலி புத்திரனை நோக்கி ஓடி வந்தான். தன் சூலத்தை எடுத்து வீசினான். தன்னை நோக்கி வரும் சூலத்தைக் கண்டு, யுத்த கலையை அறிந்தவனான அங்கதன் சட்டென்று நகர்ந்து தன் மேல் படாதவாறு தப்பித்துக் கொண்டான். அதே வேகத்தில் எழுந்து தன் கைகளால் பலமாக கும்பகர்ணனை மார்பில் அடித்தான். மலை போல நின்ற கும்பகர்ணன் இந்த அடி தன் மேல் படவும், ஆத்திரத்தோடு முஷ்டியினால் அங்கதனை ஒரு குத்து விட்டான். முஷ்டியினால் அடித்த அடி அங்கதனை பதம் பார்த்து விட, அவன் நினைவின்றி பூமியில் விழுந்தான். அவன் நினைவின்றி தரையில் விழுந்ததைக் கண்டபின் சூலத்தை சுக்ரீவனை நோக்கி வீசினான். தன்னை நோக்கி வேகமாக வரும் கும்பகர்ணனைப் பார்த்து சுக்ரீவன் தயாராக துள்ளி குதித்து அங்கும் இங்குமாக கும்பகர்ணனை அலைக்கழித்தான். கும்பகர்ணன் சுக்ரீவனைப் பிடிக்க வேகமாக ஓட வேண்டியதாயிற்று. கும்பகர்ணனை நோக்கி சுக்ரீவனும் வேகமாக ஒடி வந்தான். அவன் வருவதைப் பார்த்து கும்பகர்ணன் நின்றான். வானர வீரர்கள் உடலிலிருந்து பெருகிய ரத்தம் அவன் உடல் பூரா பரவிக் கிடக்க, நின்று கொண்டிருந்த கும்பகர்ணனைப் பார்த்து சுக்ரீவன் சொன்னான். ராக்ஷஸ, மிக கடினமான செயல்களை செய்திருக்கிறாய். வானர வீரர்களில் தலைவர்களை அடித்து எழுந்திருக்க முடியாமல் செய்து விட்டாய். நிறைய வானரங்களை தின்று தீர்த்து விட்டாய். வானர சேனையை விட்டு விடு.  சாதாரண ஜனங்கள், அவர்களோடு உனக்கு என்ன? சமமான என்னுடன் போரிடு.  இதோ நான் வீசி எறியப் போகும் மலைக்கு பதில் சொல், இதைக் கேட்டு, கும்பகர்ணன், சத்வ (நியாயம்) தைரியமும் நிறைந்த சொற்களைக் கேட்டு, சுக்ரீவா, நீ ப்ரஜாபதியின் பேரன். ருக்ஷ ராஜனின் மகன். உன் பௌருஷமும், நிறைந்த வீரமும் பிரஸித்தி பெற்றதே. அது தான் கர்ஜிக்கிறாய். கும்பகர்ணன் சொல்லி முடிக்கவும், சுக்ரீவன் அவன் சூலத்தை முறித்து தன் கையிலிருந்த கல்லையும் வீசினான். கும்பகர்ணனின் மார்பில் பட்டு, வஜ்ரம், அசனி போல வேகமாக தாக்கியும், அது கும்பகர்ணனின் விசாலமான மார்பில் பட்டுத் தெறித்து விழுந்தது. இதைக் கண்டு வானரங்கள் வருந்தின. ராக்ஷஸ கணங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. மின்னலைப் போல பள பளத்த தன் சூலத்தை, மிகுந்த ஆத்திரத்துடன், சுக்ரீவனை வதம் செய்யும் பொருட்டு வீசினான். கும்பகர்ணனின் சூலம், பொன்னால் ஆன வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. அது சுக்ரீவனின் புஜத்தை துளைத்து வெளி வருவதை எங்கிருந்தோ தொலைவிலிருந்தே கண்டு கொண்ட மாருதி, ஒரு நிமிஷத்தில் ஓடி வந்து, தன் கைகளால் முறித்தான். மகா கனமாக இருந்த அந்த சூலத்தை தன் முழங்காலில் வைத்து இரு கைகளால் அந்த சூலத்தை முறித்ததைக் கண்ட வானரங்கள் குதூகலத்தில் ஆழ்ந்தன. ஆரவாரித்தன. மாருதியை புகழ்ந்து பேசும் வானர சைன்யத்தைப் பார்த்து கும்பகர்ணனின் முகமும் மாறியது. சிங்க நாதம் செய்யும் வானரங்களைப் பார்த்தபடியே உடைந்து கிடந்த தன் சூலத்தைக் கண்டு, தானும் லங்கையின் மலைய மலையின் சிகரத்தை பெயர்த்து எடுத்து சுக்ரீவனை அடித்தான். அந்த பெரிய பாறையால் அடிபட்ட சுக்ரீவன் நினவிழந்து விழுந்தான். இதைக் கண்டு ராக்ஷஸ சைன்யம் மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தது. சுக்ரீவனைத் தூக்கி, காற்று மேகத்தை தாங்கியது போல, கையில் இடுக்கியபடியே, நடந்தான் கும்பகர்ணன். மேரு மலையே தன் சிகரங்களில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு நடப்பது போல நடந்தான். மற்ற ராக்ஷஸர்கள் புகழ்ந்து பாராட்ட வேகமாக நடந்து சென்றவன், தேவர்களும் இந்த வானரன் பிடிபட்டதால் வருந்தி, செய்வதறியாது நிற்பதையும், புலம்புவதையும் கேட்டு, இவன் ஒரு முக்கியமானத் தலைவன். இவனைப் பிடித்தால் எல்லாமே நம் வசத்தில் ஆனது போலத்தான். ராகவன் உட்பட, சைன்யம் ஜெயித்த மாதிரிதான் என்று எண்ணிக் கொண்டான், இந்திரனைப் போரில் வென்று வெற்றி வாகை சூடியவனான கும்பகர்ணன். 

 

வானர சைன்யம் நாலா புறமும் சிதறி ஓடுவதையும் சுக்ரீவனை அனாயாசமாக தூக்கிக் கொண்டு ராக்ஷஸன் நடந்து செல்வதையும் பார்த்து ஹனுமான் கவலையுடன் யோசிக்கலானான். சுக்ரீவன் பிடிபட்ட நிலையில் என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்? என்று புத்திசாலியான ஹனுமான் யோசித்தான். நியாயமாக நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன். நான் பர்வதம் போல் என் உருவத்தை ஆக்கிக் கொண்டு கும்பகர்ணனை வழி மறிக்கிறேன். என் முஷ்டியால் காயப்பட்டு, கும்பகர்ணன் யுத்தத்தில் விழுவானேயானால், சுக்ரீவனை அவன் கையிலிருந்து விடுவித்து விடலாம். இந்த வானர வீரர்கள் அப்பொழுது தான் நம்பிக்கை கொள்வார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். அல்லது என் கையால் இந்த ராக்ஷஸன் மோக்ஷத்தை அடைந்தாலும், சரிதான். சுக்ரீவனே அதை செய்யக் கூடியவன் தான். அவனை தேவர்களோ, அசுரர்களோ, பிடித்திருந்தால் இன்னேரம் வானராதிபன் தன்னை சமாளித்துக் கொண்டிருப்பான். கும்பகர்ணன் இவனை பெரிய மலைச் சிகரத்தால் (பெரிய பாறையால்) அடித்ததில் நினவின்றி கிடக்கிறான். முஹுர்த்த நேரத்தில் நினைவு திரும்பி தனக்கும், மற்ற வானரங்களுக்கும் எது நல்லதோ, அதைச் செய்வான். நான் இடையில் புகுந்து சுக்ரீவனை விடுவித்தால், அவனுக்கு பிடிக்காமலும் போகலாம். அவன் கீர்த்தியும் குறையும். ஒரு முஹுர்த்த நேரம் காத்திருப்போம். வானர ராஜன் தெளிந்து தன் வீர்யத்தைக் காட்டட்டும். கலைந்து போன வானர சைன்யத்தை நான் ஒன்று சேர்க்கிறேன். சமாதானம் சொல்லி போரில் ஈடுபட வைக்கிறேன், என்ற முடிவுக்கு வந்த மாருதாத்மஜன், தன் படையை ஒழுங்கு படுத்துவதில் முனைந்தான். இதற்கிடையில் கும்பகர்ணன் சுக்ரீவனை தன் கட்கத்தில் இடுக்கியபடியே லங்கை சென்றடைந்தான். லங்கா வாசிகள் புஷ்ப மாரி பொழிந்தனர். வீடுகளிலும், மாளிகைகளிலும் நின்றிருந்த ராக்ஷஸர்கள், பொரி, வாசனைப் பொருட்கள் கலந்த நீர் இவற்றை மேலேயிருந்து வர்ஷித்தனர். ராஜ மார்கம் குளிர்ந்து இருந்ததால், சுக்ரீவன் தன் நினைவு வரப் பெற்றான். இதன் பின் அவன் தன் சுய நினைவுடன் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தியவன், தன்னைத் தூக்கிச் செல்லும் கும்பகர்ணனை சற்று ஆயாசத்துடன் நோக்கினான். இப்படி, இறுக அணைத்துக் கொண்டு போகும் இவனிடம் நான் தப்பித்து வெளியேறுவது முடிகிற காரியமா? ஆனாலும், வானர வீரர்களுக்கு ஹிதமானதும், பிடித்ததுமான ஒரு காரியத்தைச் செய்கிறேன். திடுமென, தன் விரல்களால் ராக்ஷஸனின் காதுகளைப் பிடித்துக் கொண்டு பற்களால் மூக்கை கடித்து, பக்கங்களிலும் கிடைத்த இடங்களில் கடிக்கலானான். அந்த கும்பகர்ணன், கர்ணமும் (காதும்) நாச (மூக்கும்) கடி பட்டதில் வலி பொறுக்க முடியாமல், ஆத்திரத்துடன் சுக்ரீவனை கீழே போட்டு கால்களால் மிதித்தான். பூமியில் விழுந்து, பயங்கரமான பலம் கொண்ட கால்களால்  தாக்கப் பட்ட சுக்ரீவன், மற்ற ராக்ஷஸர்களும் சேர்ந்து கொள்ள, திணறிய சுக்ரீவன், க்ஷண நேரம் கிடைத்த இடைவெளியில் ஆகாயத்தில் தாவி, ராமன் இருக்கும் இடம் வந்து சேர்ந்து விட்டான்.  காதும் மூக்கும் கடி பட்டு வலி வருத்திய போதிலும், கும்பகர்ணன் தன் நிதானத்தை இழக்கவில்லை.  ப்ரஸ்ரவன மலையில் அருவிகள் பெருகி ஓடுவது போல அவனது பெருத்த சரீரத்திலிருந்து ரத்தம் ஆறாக பெருகி ஓடியது. அப்படியும் யுத்தம் செய்வதிலிருந்து பின் வாங்க விரும்பாதவனாக திரும்ப யுத்த பூமிக்கே வந்து சேர்ந்தான். சந்த்யா கால மேகம் போல, நீல மலை போன்ற தன் சரீரத்தில், சிவந்த ரத்தப் பெருக்கினால் நனைந்த நிலையிலும், இடையிடையே சிவந்து தென் படுவது போல காணப்பட்டான். சுக்ரீவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். கையில் ஆயுதம் இல்லையே என்று யோசித்து, ஒரு முத்கரத்தை கையில் எடுத்துக் கொண்டான். நகரத்திலிருந்து வேகமாக வெளிப்பட்டு, இன்னும் பெருகி வளர்ந்த தன் ஆற்றலுடன், பாதத்தாலும், முஷ்டிகளாலும், மிகவும் பயங்கரமாக தாக்கினான்.

 

யுகாந்த, யுக முடிவில், அக்னி போல கொழுந்து விட்டெரிந்த கோபத்துடன்,  வானர வீரர்களை வாயில் போட்டு மென்றான். சாதாரணமாகவே நிறைய சாப்பிடுபவன், பசியும் வந்து விட்டால், கேட்பானேன். வானர சைன்யத்தின் உள்ளே புகுந்து அவர்களை நசுக்கி விட்டான். எதிரில் வருவது யார் என்று கவனித்து பார்க்க கூட மோகம் கண்ணை மறைத்தது. ராக்ஷஸனோ, வானரமோ, பிசாச, கரடிகளோ எதுவானாலும், யுக முடிவில் அக்னி வேற்றுமை பாராது அழிப்பது போல வானர முக்யமான படைத் தலைவர்களை அழிக்கலானான். ஒன்று, இரண்டு, மூன்று, பல, கை நிறைய, அகப்பட்டவரை, என்று கோபத்துடன், உடன் வந்த ராக்ஷஸர்களோடு ஒரு கையில் சேர்த்து பிடித்து வாயில் போட்டுக் கொண்டான். தன் உடலைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாதவனாக, வானரங்களை துரத்தி துரத்தி பிடித்தான். ரத்தமும், மாமிசமும் உடலில் பட்ட காயங்களிலிருந்து வெளிப் பட்டன. இடை விடாது வானரங்கள், மரக் கிளைகளால் அடித்ததையும் உதறி விட்டு மேலும் முன்னேறினான். தப்பித்த சில வானரங்கள், ராமரிடம் ஓடின. கும்பகர்ணன் மகா கோபத்துடன் வானரங்களை விழுங்கியபடி வருகிறான், நூற்றுக் கணக்காக, ஏழு, எட்டு, இருபது, முப்பது வானரங்களை ஒன்றாக கட்டியணைத்து வாயில் போட்டு மென்றபடி வருகிறான். உடல் பூராவும் நிணமும், மாமிசமும் ரத்தமும், காயம் பட்ட இடங்களிலிருந்து கிழிந்து தொங்கும் சதையுமாக, மகா பயங்கரமாகத் தெரிகிறான். உயிரற்ற சடலங்களை மாலையாக கோத்தது போல, காதில் மாட்டிக் கொண்டிருக்கிறான். சூலங்களை, கூர்மையான நுனிகளுடன் வீசி வீசி எறிகிறான். சற்றும் வாட்டமின்றி, யுகாந்தாக்னி போல மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறான்.

 

இதைக் கேட்டு லக்ஷ்மணன், தானே போர் செய்யத் தயாராக வந்தவன், ஏழு கூரிய பாணங்களை கும்பகர்ணனின் உடலில் படும் படி விட்டான். ராக்ஷஸனின் சரீரத்தில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. வெண்ணிற கவசத்தின் மேல் குத்திட்டு நின்ற பாணங்கள் தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்ததால் ஏற்பட்ட மஞ்சள் நிறமும், பிண்ணனியில் கும்பகர்ணனின் மேகம் போன்ற கரிய உடலும், ஆகாயம் (நீல) சூரியனின் (வெண்ணிற கவசம்) மறையும் சமயத்தில் பொன்னிற (அம்புகள்) கிரணங்களுடன் இருப்பது போல தோன்றியது. அலட்சியமாக லக்ஷ்மணனைப் பார்த்து ராக்ஷஸன் சொன்னான். இடி இடிப்பது போன்ற குரலில் நான் கோபமாக இருக்கும் பொழுது, அந்தகனுக்கு பயத்தைத் தருபவன். பயப்படாமல் எதிரில் வந்து நிற்கிறாயே, இதிலேயே உன் வீரம் தெரிகிறது. சாக்ஷாத் ம்ருத்யுவே வந்து நின்றது போல கையில் ஆயுதத்தோடு நான் நிற்கும் பொழுது, போரிட எதிரில் வந்து நின்றாலே, அவனை சிலாகிக்க வேண்டும்.  அப்படியிருக்க, பயமின்றி என்னுடன் யுத்தம் செய்யத் தயாராக இருப்பவனை (எனக்கு யுத்தம் செய்ய வாய்ப்பு கொடுப்பவனை) நான் பாராட்டத்தான் வேண்டும். ஐராவதத்தின் மேல் அலங்காரமாக பவனி வரும் இந்திரன் கூட, தன் தேவர்கள் கூட்டம் தொடர்ந்து வர வருபவன், அவன் கூட யுத்த பூமியில் எனக்கு நேருக்கு நேர் நின்று சண்டையிட தைரியம் இல்லாமல், ஒரு தடவை கூட என்னுடன் மோதவில்லை (ஸ்லாகனீயோ அஸி மே ரிபு:)  எனக்குத் தகுந்த எதிரி தான் நீ.  பாராட்டப் பட வேண்டிய எதிரி. வீரத்தில், என்னுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நீ பாலனே யானாலும், உன் பராக்ரமம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சௌமித்ரே, உன் அனுமதியுடன், ராமனிடம் போக விரும்புகிறேன். உன்னுடைய சத்வ குணம், தைர்யம், பலம், உத்ஸாகம் இவற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வீரனுக்கு வீரனை சந்திப்பதில் தான் ருசி.  யுத்தகளத்தில் ராமனை மட்டும் தான் யுத்தம் செய்து கொல்ல விரும்புகிறேன். அவன் ஒருவன் வீழ்ந்தால் மற்ற எல்லோருமே தோற்று வீழ்ந்தது போலத்தான். ராமனை நான் கொன்ற பின்பும் மீதி யாராவது இருந்து என்னுடன் போரிட வந்தால், அவர்களுடன் போரிடுகிறேன்.

 

இவ்வாறு கர்வதுடன் பேசும், பார்க்கவே பயங்கரமாக இருந்த ராக்ஷஸனைப் பார்த்து சௌமித்ரி, சிரித்துக் கொண்டே பதில் சொன்னான். ராக்ஷஸனே, நீ சொல்லும் இந்திரன் முதலானோரை தன் பராக்ரமத்தால் தோற்கடித்து ஓடச் செய்த விஷயம், அவர்களால் தாங்க முடியாத உன் வீரம், அது சத்யமே. சந்தேகமேயில்லாமல் இன்று உன் பராக்ரமத்தை நான் நேரிலும் பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த தசரத குமாரனான ராமன், மற்றொரு மலை போல எதிரில் நிற்கிறானே, அசைக்க முடியாத பலசாலியாக எதிரில் நிற்கிறானே, அவனிடம் உன் போர் புரியும் ஆசை கண்டிப்பாக நிறைவேறும், என்று சௌமித்ரி பரிகாசமாக சொல்லவும், அவனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக அவனை புறக்கணித்து விட்டு, ராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடினான். அவன் ஓடும் பொழுது பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு தாசரதியான ராமன், ரௌத்ரம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, கும்பகர்ணனின் ஹ்ருதயத்தில், கூர்மையான சரங்களை விட்டார். ஓடி வரும் கும்பகர்ணனின் மார்பில் வேகமாக வந்து தைத்த அம்புகள், நெருப்புத் துண்டங்களாக அவனுடைய வாயிலிருந்து வெளியேறின. ராமனது அஸ்திரத்தால், அடி பட்டதால், மேலும் கோபம் கொண்ட கும்பகர்ணன், வழியில் இடைப் பட்ட வானரங்களை மிதித்து த்வம்சம் செய்து கொண்டு மேலும் முன்னேறினான். உடலில் தைத்த ராம பாணங்கள் குத்திட்டு நின்றன. கைகளில் பட்டுத் தெறித்து பாணங்கள் பூமியில் விழுந்தன. ஆயுதங்கள் யுத்த பூமியில் இரைந்தன. தான் நிராயுத பாணியாக நிற்பதை உணர்ந்தான், கும்பகர்ணன். தன் முஷ்டியாலும், பாதங்களாலும் சண்டையை அதே வேகத்தில் தொடர்ந்தான். சரீரத்தில் ஒவ்வொரு இடமும் பாணங்கள் குத்தி ரத்த விளாறாக்க, ப்ரஸ்ரவன மலை போல அருவியாக ரத்தம் கொட்ட, மேலும் மேலும் கோபம் கொண்டவனாக, வெறி பிடித்தவன் போல போரில் ஈடு பட்டான். எதிரில் வந்தது யாரானாலும், ராக்ஷஸர்களோ, வானரங்களோ, கரடிகளோ, எடுத்து வாயில் போட்டு மென்று, விழுங்கியபடி ஓடினான். மிகப் பெரிய மலை சிகரத்தை எடுத்து, ராமனை நோக்கி வீசினான். தன் அருகில் வரு முன் ராமர், இடையிலேயே ஏழு பாணங்களால் அதை தூள் தூளாக சிதறச் செய்தார். இருநூறு வானரங்கள் மேல் அதன் சிதறல்கள் பட்டு, வானரங்களை கீழே தள்ளியது.

 

அந்த சமயம் லக்ஷ்மணன், ராமனிடம் சொன்னான். கும்பகர்ணனை வதம் செய்வதே, சரி. அதற்கான காலமும் இதுவே. இவனுக்கு ராக்ஷஸர்கள், வானரங்கள் என்ற வித்தியாசம் கூடத் தெரியவில்லை. தன் ஆட்களையே கூட அடித்து விழுங்குகிறான். வானரங்கள் கும்பகர்ணன் மேல் ஏறி நிற்கட்டும். படைத் தலைவர்களும் எப்படி நின்றால் பாதுகாப்பாக இருக்குமோ, அப்படி எதிரில் தள்ளிஸ்ரீ நின்று கொள்ளட்டும்.  வானரங்கள் கூட்டமாக ஏறி நின்று பாரம் தாங்காமல் விழுந்தாலும் மற்றவர்களை கொல்ல மாட்டான். இவன் விழும்பொழுது சேதம் ஆவதை தடுக்கவே இந்த ஏற்பாடுகள் என்று சொன்ன லக்ஷ்மணன் அறிவுரையை ராமர் ஏற்றுக் கொண்டார். வானரங்கள் சந்தோஷமாக கும்பகர்ணனின் மேல் ஏறி நின்றார்கள். தன் மேல் ஏறி நின்ற வானரங்களை எதுவும் செய்ய முடியாமல் கும்பகர்ணன் ஆத்திரம் கொண்டான். துஷ்ட யானை, தன் மாவுத்தனை தள்ளுவது போல அவர்களை உதறித்தள்ள முயன்றான். அவர்கள் சிதறி விழுவதைப் பார்த்து ராமர், இவன் துஷ்டன், அடிக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்து, வேகமாக, உத்தமமான தன் வில்லை எடுத்து கோபத்துடன் கண்கள் சிவக்க, பார்வையாலேயே எரிப்பது போல ராக்ஷஸனை நோக்கி வேகமாக சென்றார். படைத் தலைவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, இது வரை கும்பகர்ணனிடம் பயத்துடன் சஞ்சலத்துடன் இருந்த வானர வீரர்களை சமாதானப்படுத்தியவாறு, சென்றார்.

 

புஜங்கம் போன்ற தன் வில்லை எடுத்து த்ருடமான நாணில் அம்பை வைத்து வானரங்கள் நாலா புறமும் சூழ்ந்து வர பின்னால் லக்ஷ்மணன் தொடர்ந்து வர, புறப்பட்டார். கிரீடம் தரித்திருந்த எதிரியான கும்பகர்ணனைக் கண்டார். உடல் பூரா ரத்த விளாறாக இருந்தவனை, மகா பலசாலியான கும்பகர்ணனை, கோபம் கொண்ட திக்கஜம் போல, சுற்றிலும் நின்றவர்களை அச்சுறுத்தி ஓடச் செய்தபடி, வானரங்களைத் தேடி அலைந்தவனை, ராக்ஷஸர்கள் தடுத்துக் கொண்டிருப்பதையும், விந்த்ய மலைக்கு ஒப்பானவனை, தங்கத்தாலான அங்கதம் என்ற ஆபரணத்தை அணிந்தவனை,  மழைக்கால மேகம் நீரை வர்ஷிப்பது போல், மேகம் போன்ற தன் கருத்த உடலில் ரத்தம் பெருகி வழிய நின்றவனை, வானர கூட்டத்தை கால்களால் மிதித்தே கொல்பவனை, காலாந்தகன், யமனுக்கு சமமானவனை ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான கும்பகர்ணன், அக்னிக்கு இணையான தேஜஸுடன் ஜொலிப்பதைக் கண்டு,  வியந்தவராக, தன் வில்லின் நாணை இழுத்து நாதம் வரச் செய்தார். இந்த வில்லின் நாதத்தைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த ராக்ஷஸன், அதை சற்றும் பொறுக்க மாட்டாதவனாக, ராகவனை நோக்கி ஓடி வந்தான். ராகவனுக்கு முன்னால், கையில்  க3தை4யுடன் நின்ற தன் சகோதரன் விபீஷணனைக் கண்டு தயங்கினான். விபீஷணனைப் பார்த்து, கும்பகர்ணன், ஏஅடி, அடி சீக்கிரம், க்ஷத்திரிய தர்மம். இதில் உறுதியாக நில்.  சகோதர பாசத்தை தூக்கியெறிந்து விட்டு, ராகவனுக்காக ஆயுதம் எடுத்தவன், அவனுக்கு நன்மை எதுவோ அதைச் செய். குழந்தாய், நமது காரியம் முடிந்து விட்டது. நீ செய்ததும் சரியே. ராமனை வந்து சரணடைந்தாய். நீ ஒருவன் தான் ராக்ஷஸ குலத்தில் தர்மத்தை அனுசரிப்பவன். சத்ய தர்மங்களை காப்பாற்றுபவன். தர்மத்தில் ஈடுபாடுடையவன் எப்பொழுதும் கஷ்டங்களை சந்திக்க நேராது.  நமது குலம் தழைக்க நீ ஒருவன் தான் மீதியாக இருக்கப் போகிறாய். ராகவனுடைய கருணையால் நீ ராக்ஷஸ ராஜ்யத்தை அடைந்து சௌக்யமாக இருப்பாய். நான் சொல்வதைக் கேள். சகோதரனே, சீக்கிரம் வழியை விட்டு விலகி நில். குறுக்கே வராதே. எனது இயல்பு, எதிரில் வருவது யாராக இருந்தாலும் அடிப்பது. நகர்ந்து கொள். நிசாசரனே, யுத்தத்தில் எதிரில் நிற்பவன், தன்னைச் சார்ந்தவனா. எதிரியா என்று கூட பல சமயங்களில் எனக்குத் தெரிவதில்லை. உன்னை பாதுகாப்பதும் என் கடமையே. குழந்தாய், இது நான் சொல்வது வெறும் வார்த்தைக்காக அல்ல. உண்மையாக சொல்கிறேன். இவ்வாறு கும்பகர்ணன் சொன்னதைக் கேட்டு விபீஷணன் பதில் சொன்னான்.  நம் குலத்தை ரக்ஷிப்பதற்காக இந்த விஷயங்களை எல்லா ராக்ஷஸர்களிடமும் சொன்னேன். யாருமே கேட்கவில்லை. அதனால் தான் ராமனிடம் வந்து சேர்ந்தேன். கையில்  க3தை4யும், கண்களில் கண்ணீருமாக விபீஷணன் இவ்வாறு சொல்லி கும்பகர்ணனை விட்டு விலகி, தனிமையில் மிகவும் வருத்ததோடு நின்று மனதில் யோசிக்கலானான். 

 

இதன் பின், காற்றினால் தள்ளப் பட்டு நகரும் கருமேகம் போன்ற உருவத்துடன், பு4ஜங்க3ராஜனான நாகம் போன்ற நீண்ட கைகளுடன், கிழே விழும் மலை போல இருந்த கும்பகர்ணனை நெருங்கி விட்ட ராமர், வா, வா ராக்ஷஸ ராஜனே, ஏன் வருந்துகிறாய். இதோ நான் கையில் வில்லுடன் எதிரில் நிற்கிறேன். சற்று நேரத்தில் நினைவின்றி விழப் போகிறாய். அதற்கு முன், நான் யாரென்று தெரிந்து கொள். இந்திரனுடைய (மாற்றந்தாய் மகனாக) சகோதரன் எனவும், ராமன் தான் இது என்று புரிந்து கொண்ட கும்பகர்ணன், பலமாக கோரமாக சிரித்தான். ஆத்திரத்துடன் ஓடினான். வானர படையினர் பயந்து அலறிக் கொண்டு திக்குக்கு ஒன்றாக ஓடின. அவர்கள் ஹ்ருதயமே, பயத்தில் கீழே விழுந்து விடும் போலத் தோன்றியது. இடி முழக்கம் போன்ற தன் குரலால் ராமனைப் பார்த்து சிரித்தபடி கும்பகர்ணன் ராமனைப் பார்த்து ஏஎன்னை விராத4ன் என்று என்ணாதே. நான் க2ரனும் அல்ல. கப3ந்த3னும் அல்ல. வாலியோ, மாரீசனோ அல்ல.  உன் எதிரில் கும்பகர்ணன் நான் வந்திருக்கிறேன். என் முத்3கரம் என்ற இந்த இரும்பு ஆயுதத்தைப் பார். இதை வைத்துக் கொண்டு தான் தேவ, தானவர்களை முன்பு ஜயித்தேன். என் காது, மூக்கை அரிந்து விட்டதால் எனக்கு பலம் இல்லை என்று எண்ணாதே. இந்த இரண்டையும் இழந்ததால், எனக்கு மிகச் சிறிய அளவிலேயே இதன் பாதிப்பு தெரிகிறது. உன் இக்ஷ்வாகு குல வீரயத்தைக் காட்டு. அதன் பின் உன் வீர பராக்ரமங்களைத் தெரிந்து கொண்டு விழுங்குகிறேன். கும்பகர்ணன் இப்படிச் சொன்னதைக் கேட்டு ராமரும், கூரான பாணங்களை விட்டார்.

 

இதன் தாக்குதலால், தேவர்களுக்கு எதிரியான கும்பகர்ணன் சற்றும் பாதிக்கப் பட்டதாக தெரியவில்லை. எந்த பாணங்களால், சால மரங்கள் ஏழும் ஒன்றாக சாய்க்கப் பட்டனவோ, எந்த ஒரு பாணத்தால் வாலி மறைந்தானோ, அந்த வஜ்ரம் போன்ற பாணம் கும்பகர்ணனின் சரீரத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மழை போல வரிசையாக வந்து விழுந்த பாணங்களை தன் முத்கரத்தால் தடுத்து நிறுத்தியும், மீறி வந்தவைகளை விழுங்கியும் கும்பகர்ணன், தன்னைக் காத்துக் கொண்டான். தேவர்கள் படையை கலங்க அடித்த தன் ஆயுதமான முத்கரத்தை முழுவதுமாக சுழட்டி அடிக்க எஞ்சியிருந்த வானர படையினரும் அலறி ஓடி வெகு தூரம் சென்று விட்டன. இதன் பின் ராமர், வாயவ்யம் என்ற அஸ்திரத்தை எடுத்து பிரயோகிக்க, முத்கரம் ஏந்திய கை துண்டித்து விழுந்தது. அவன்  பயங்கரமாக அலறிய அலறல், திக்கெல்லாம் எதிரொலித்தது. வானர வீரர்கள் எஞ்சியிருந்தோர் நின்றிருந்த இடத்தில், முத்கரம் என்ற அந்த ஆயுதத்தை ஏந்தியிருந்த கை விழவும், விழுந்த வேகத்தில் பெரிய மலை சரிந்தது போல வானரங்கள் அதன் அடியில் சிக்குண்டார்கள். இந்த வானரங்கள் இந்த அடி தாங்காமல் திணறி, உடல் நடுங்கி வேர்வை பெருக, வருத்தத்துடன், நரேந்திர ரக்ஷோபதி சண்டையை வேடிக்கை பார்க்கலானார்கள். ஒரு கை இழந்த நிலையில் மற்றொரு கையால் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு கும்பகர்ணன் சண்டையைத் தொடர்ந்தான். ஐந்த்ராஸ்திரம் என்ற அஸ்திரத்தைப் போட்டு பெரிய சால விருக்ஷத்தைத் தாங்கிய மற்றொரு கையையும் ராமர் துண்டித்தார். அந்த கை சால விருக்ஷத்தோடு சேர்ந்து கீழே விழவும், அதன் அடியில் பல மரங்களும், செடி, கொடிகளும் நசுங்கின. இப்பொழுதும் பல வானரங்களும், ராக்ஷஸர்களும் அடி பட்டனர். இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் பலமாக கத்தியபடி ஓடி வரும் ராக்ஷஸனை நோக்கி, ராமர் இரண்டு அர்த்த சந்த்ர ஹாரம் என்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு, ராக்ஷஸனின் இரண்டு பாதங்களையும் வெட்டித் தள்ளினார். அந்த பாதங்கள் முறிந்து விழுந்த சத்தம், திசைகள் தோறும், மலைகளின் மேல், குகைகளில், சமுத்திரத்தில், லங்கையில், வானர ராக்ஷஸ சேனைகளின் மேல் பட்டு எதிரொலித்தது. பயங்கரமாக கேட்டது. இப்பொழுதும் வடவாக்னி போன்ற தன் வாயைத் திறந்தபடி, ராகு சந்திரனை விழுங்க ஓடி வருவது போல கும்பகர்ணன் ராமனை நோக்கி ஓடி வந்தான். அவன் வாயில் கூர்மையான ஆயுதங்களைப் போட்டு நிரப்பினார், ராமர். வாயடைத்து போன கும்பகர்ணன் எதுவும் பேசவோ, கத்தவோ சக்தியற்றவனாக நின்ற நேரத்தில், சூரிய கிரணம் போலவும், ப்ரும்ம தண்டம் போலவும், அந்தகனின் கால கல்பம் போலவும், அரிஷ்டம் எனும் இந்திராஸ்திரத்தை, வாயு வேகத்தில் அவன் மேல் பிரயோகம் செய்தார். அந்த அஸ்திரம், உயர்ந்த வேலைப்பாடுகள் கொண்டதாய், தங்கத்தால் இழைத்து செய்யப்பட்டது போன்ற ஒளி வீசும் தன்மையதாய், வஜ்ரம் போன்ற உறுதியும், சூரியனின் உக்ரமமான தகிக்கும் கிரணங்கள் போன்றும், மகேந்திரனுடைய வஜ்ராசனிக்கு இணையான வேகம் கொண்டதுமான திவ்யாஸ்திரத்தை அந்த நிசாசரன் மேல் பிரயோகித்தார். அந்த அம்பு ராமர் கையிலிருந்து விடுபட்டு நாலா திக்குகளிலும் ஒளி மயமாக ஆக்கியபடி, புகையில்லாத வைஸ்வானர அக்னி எரிவது போல சென்றது. பற்களை இழந்து, வாய் பெரிய குகை போலத் தெரிய, அழகிய குண்டலங்கள் மட்டும் தொங்க, முன் ஒரு காலத்தில் இந்திரன் விருத்திரனை அடித்து வீழ்த்தியது போல ராம பாணம் கும்பகர்ணனின் தலையை கொய்து தள்ளியது.

 

கும்பகர்ணனுடைய தலை, குண்டலங்களின் ஒளியில் சூரியோதய சமயம், ஆகாயத்தில் தனித்து நிற்கும் சந்திரனைப் போல தெரிந்தது. பெரிய மாளிகைகளின் மேல் கோபுரங்கள், கும்பகர்ணனின் தலை விழுந்த வேகத்தில் ஆட்டம் கண்டன. சில கூடவே விழுந்தன. கும்பகர்ணன் விழுந்த பொழுது அவன் சரீரம் பட்டு பல வானரங்கள் நசுங்கின. இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்த வானரங்கள், தங்கள் அஜாக்கிரதையால் அடி பட்டு விழுந்தன. இமய மலையை ஒத்த கும்பகர்ணனின் சரீரம் சமுத்திரத்தில் விழுந்தது. முதலைகளும், மீன்களும், பாம்புகளும் கலங்கி பூமிக்கு வந்தன. இந்த தேவ சத்ரு இறந்தான் என்று தேவர்கள் உற்சாகமாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததில், பூமியும், பூமி தாங்கும் மலைகளும் கூட அதிர்ந்தன. இதன் பின் தேவ ரிஷி, மகரிஷி, பன்னக, சுரர்கள், மற்ற ஜந்துக்கள் சுபர்ண, குஹ்யகம் எனும் ஜீவ ராசிகள், யக்ஷ, கந்தர்வ கணங்கள், ராமர் பராக்ரமத்தால் மகிழ்ந்தவர்களாக, பயமின்றி வெளி  வந்து ஆகாயத்தில் சஞ்சரித்தனர். ராக்ஷஸனின் பந்துக்கள் தன்மானம் நிறைந்த வீரர்கள், பலமாக கதறியழுதனர். ரகு குலோத்தமனான ஹரியைப் பார்த்து பார்த்து, முன் எப்படி தேவர்கள் வருந்தி புலம்பினரோ, அதே கதியை அடைந்தவர்களாக புலம்பினர். ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சூரியன் போல தேவ லோகத்து இருட்டை விலக்கியவனாக, பூமியில் வானர வீரர்கள் மத்தியில் கும்பகர்ணனை அழித்த ராமன் நின்றான். வானர வீரர்கள், மகிழ்ச்சிப் பெருக்கில், மலர்ந்த தாமரை மலர்கள் போல மலர்ந்த  முகத்துடன் காணப் பட்டனர்.  சக்தி வாய்ந்த எதிரியை அடித்து வீழ்த்திய ராமரை, பாராட்டி, கொண்டாடினார்கள்.  பல யுத்தங்களில் கும்பகர்ணன் போரிட்டு வெற்றியே அடைந்த சிரமம் நீங்க, தேவர்களைத் துன்புறுத்தி விரட்டிய சிரமம் நீங்க கும்பகர்ணனை இந்த யுத்தத்தில் ஜயித்து, பரதன் முன் பிறந்தோனான ராமர், பெரும் போரில் விருத்திரனை வென்ற இந்திரன் போல விளங்கினார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்பகர்ண வதம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 68 (475) ராவணானுசோக: (ராவணன் வருந்துதல்)

 

ராவணன் கையால் கும்பகர்ணன் மாண்டான் என்ற செய்தி ராக்ஷஸர்கள் மூலம் ராவணன் செவிக்கு எட்டியது. ராஜாவே, காலனுக்கு சமமான கும்பகர்ணன் வானர சேனையை ஓட ஓட விரட்டியபடி, பல வானரங்களை விழுங்கி ஒரு முஹுர்த்த காலம் அவர்களை வாட்டி எடுத்து விட்டு, ராமனுடைய தேஜஸால் அமைதியடைந்து விட்டான். பாதி உடல் சமுத்திரத்தில் விழுந்து கிடக்கிறது. பயங்கரமான பெருத்த அவனது உடல் தலையும் இன்றி கை கால்களும் இன்றி, ரத்தம் பெருகக் கிடக்கின்றது. லங்கையின் வாசலை அடைத்தபடி, பர்வதம் போல அவன் சரீரம் விழுந்து கிடக்கிறது. உன் சகோதரன், கும்பகர்ணன், ராமனுடைய பாணங்களால் அடிபட்டு, கபந்தனாக (தலையில்லாத சரீரியாக) காட்டுத் தீயில் வெந்த பெரிய மரம் போல விழுந்து கிடக்கிறான். பெரும் யுத்தத்தில் சண்டையிட்டு மடிந்தான், கும்பகர்ணன் என்ற செய்தியறிந்து, ராவணன் கலங்கினான். வேதனை அடைந்தான். சற்று நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான். தங்கள் தந்தை வழி உறவினர் இறந்து போனதைக் கேட்டு, தேவாந்தக, நராந்தக, த்ரிசிரஸ், அதிகாயன் முதலானோரும் வருந்தி அழுதனர். சகோதரன், ராமனுடைய எல்லையற்ற பராக்ரமத்தால் அடி பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகா பார்ஸ்வன், மகோதரன் இருவரும் சோகக் கடலில் மூழ்கினர். பிரயாசையுடன் தங்களை சமாளித்துக் கொண்டு, ராக்ஷஸத் தலைவன் ராவணன், தன் சகோதரன் கும்பகர்ணன் வதம் செய்யப் பட்டான் என்று தாங்க மாட்டாத துக்கத்துடன் புலம்ப ஆரம்பித்தான். ஹா, வீரனே, சத்ருக்களை அழிப்பவனே, மகா பலசாலியான கும்பகர்ணா, விதி தான். என்னை விட்டு நீ யம லோகம் போய் சேர்ந்து விட்டாய். என் அஸ்திரங்கள் கூட வேண்டாம் நீ ஒருவன் இருந்தால் போதும், வேறு ப3ந்துக்களும் வேண்டாம், நீ ஒருவனே போதும். அப்படிப்பட்ட நீ என்னை விட்டு எங்கே போனாய்? எனக்கு வலது கையாக இருந்தாயே, இனி நீயின்றி நான் ஒன்றுமே இல்லை. உன் பலத்தால் தான் நான் சுராசுரர்களைக் கண்டு சற்றும் பயப்படாமல், அலட்சியமாக இருக்க முடிந்தது. தேவ, தானவர்கள் கர்வத்தை அடக்கியவனே, காலாக்னி, ருத்ரன் என்றெல்லாம் உன்னை வர்ணிப்பார்களே, ராம பாணத்தால் அடி பட்டு விழுந்தாயோ. இந்திரன் வஜ்ராயுதத்தால் அடித்ததே, உன்னை எதுவும் செய்யவில்லை. அப்படிப்பட்ட நீ எப்படி ராம பாணம் வருத்தியதா, இப்படி மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டாய். இதோ, தேவ கணங்கள், ரிஷிகள் ஆகாயத்தில் நிற்கிறார்கள். யுத்தத்தில் நீ மாண்டாய் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். வானரங்கள் தங்கள் விருப்பம் ஈடேறியதாக இன்று ஆனந்தமாக குதிக்கிறார்கள். லங்கையின் மாளிகைகள், கோட்டைகள் எல்லா இடத்திலும் ஏறித் திரிகிறார்கள். ராஜ்யத்தால் எனக்கு என்ன லாபம்? சீதையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? கும்பகர்ணனைப் பறி கொடுத்த பின், எனக்கு வாழ்வில் எதுவுமே பிடிக்கவில்லை. என் சகோதரனைக் கொன்றவனை நான் போரில் வதைக்காமல் விடுவேனா. அப்படி விட்டால் நான் மரணத்தை தழுவுவதே மேல். என் வாழ்க்கையே பயனற்றதாக ஆகி விட்டது. இன்றே அவனையும் என் சகோதரன் சென்ற இடத்திற்கே அனுப்புகிறேன். என் சகோதரன் இன்றி க்ஷணமும் உயிர் வாழ்வதில் எனக்கு விருப்பம் இல்லை தான். முன்னால் நான் செய்த கொடுமைகளை எண்ணி, தேவர்கள் இப்பொழுது எள்ளி நகையாடுவார்கள். கும்பகர்ணா, நான் இனி இந்திரனுடன் எப்படி போரிடுவேன். விபீஷணன் சொன்னதைக் கேட்காமல் போனேனே. அவன் சொன்ன சுபமான அறிவுரையை அலட்சியப் படுத்தியதன் விளைவு இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன். விபீஷணன் சொன்னதும் கும்பகர்ண, ப்ரஹஸ்தன் சொன்னதும் என் நன்மைக்கே. அதை அறியாமல் விநாசத்தை எதிர் கொண்டு நின்றவன் ஆனேன். அவமானம் என்னை வாட்டுகிறது. இந்த சோகம் என் செயல்களின் பலனே. தார்மீகனான விபீஷணனை விரட்டி துரத்தியடித்தேனே, அதன் பலன் தான் இது. இவ்வாறு பல விதமாக புலம்பி கும்பகர்ணனுக்காக அழுது தசானனன், இந்திர ரிபுவான தன் உடன் பிறந்தான் மாண்ட செய்தியை அறிந்ததிலிருந்து அரற்றலானான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணானுசோக: என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 69 (476) நராந்தக வத4: (நராந்தகனின் வதம்)

 

சோகக் கடலில் மூழ்கி, புலம்பி வருந்தும் ராவண ராஜாவை, த்ரிசிரஸ் சமாதானப் படுத்தினான். பெரும் வீரன், யுத்த பூமியில் வீர சுவர்கம் அடைந்தார் எங்கள் தந்தை, கும்பகர்ணன். அவரை நினைத்து அழுவது சரியல்ல. ராஜன், தாங்கள் அமைதி படுத்திக் கொள்ளுங்கள். ப்ரபோ, மூன்று உலகுக்கும் தாங்கள் ஒருவனே ஈடு கொடுக்க முடியும்.  சாதாரண பிரஜைகள் போல இப்படி தைர்யத்தை விட்டு கலங்காதீர்கள். இதோ, நான் யுத்த பூமி செல்கிறேன். உங்களிடம் ப்ரும்மா கொடுத்த சக்தி இருக்கிறது. கவசம், அம்புகள், வில் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான கோவேறு கழுதைகள் பூட்டிய ரதம், மேகம் இடி இடிப்பது போல பெரும் சப்தத்துடன் செல்லக் கூடியது. அதில் ஏறிச் சென்று பல சமயங்களில் ஆயுதம் கூட உபயோகிக்காமல் தேவ தானவர்களை தோற்று ஓடச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது ஆயுதங்களோடு சென்று ராகவனை அழிக்க உங்களால் முடியும். அதைச் செய்யுங்கள். அல்லது சற்று நில்லுங்கள். நான் முதலில் போய் எதிரிகளை கருடன், நாகக் கூட்டத்தை அழிப்பது போல அழித்து விட்டு வருகிறேன். தேவராஜன், சம்பரனை ஜயித்தது போலவும், நரகனை விஷ்ணு ஜயித்தது போலவும், இன்று ராமனை நான் போரில் வெற்றி கொண்டு வருகிறேன்.

 

காலத்தின் (விதி) வசத்தில்  இருந்த ராவணனுக்கு த்ரிசிரஸ் சொன்ன சொல்லிலும், நம்பிக்கை பிறந்தது. தான் திரும்ப உயிர் பெற்றதாக நினைத்தான். த்ரிசிரஸ் சொன்னவுடன், தேவாந்தக, நராந்தகர்களும், அதிகாயனும் சேர்ந்து கொண்டனர். மகிழ்ச்சியுடன் நான், நான் என்று போட்டியிடலாயினர். இவர்கள் ராவணனுடைய மகன்கள். நல்ல பராக்ரமசாலிகள். இந்திரனுக்கு சமமாக யுத்தம் செய்ய வல்லவர்கள். அந்தரிக்ஷத்தில் இருந்து கொண்டு மாயா யுத்தம் செய்வதும் அவர்களுக்கு கை வந்த கலையே. இவர்களும், தேவர்களுடன் சண்டையிட்டு, அவர்கள் கர்வத்தை ஒடுக்கியவர்கள். போரில் திறமையாக போரிட்டு, எதிரிகளைத் திணற அடிக்கும் ஆற்றல் உள்ளவர்களே. எந்த யுத்தத்திலும், இவர்கள் இது வரை தோல்வியையே தழுவியதில்லை என்று புகழ் பெற்றவர்கள். நல்ல அறிவாளிகள், வரங்கள் பெற்றவர்கள்.  தேவர்களுடனும், கந்தர்வ, கின்னர, மகோரகங்களுடன், யுத்தம் செய்த அனுபவமும், அஸ்திர ஞானமும், யுத்த கலையில் விசேஷ தேர்ச்சியும் பெற்றவர்களே. பாஸ்கரனுக்கு சமமான தன் புதல்வர்களுடன் இந்திரன் அமர கணங்கள் புடை சூழ அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தான் ராவணன். தன் புத்திரர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு அலங்காரமாக ஆபரணங்கள் பூட்டி, பல விதமாக ஆசிர்வாதங்கள் செய்து யுத்தம் செய்ய அனுப்பினான்.

 

யுத்தம் என்றாலே வெறி கொள்ளும் தன் சகோதரர்கள், மகா பார்ஸ்வன், ப்ரமத்தன், மகோதரன் இவர்களை தன் பிள்ளைகளை பாதுகாத்து ரக்ஷிக்க என்று உடன் அனுப்பினான். எதிரிகளைத் துன்புறுத்துவதில், ஈடு இணையற்ற வீரனான ராவணனை வணங்கி (ராவணம், ரிபு ராவணம்)  இவர்கள் போர் முனைக்கு புறப்பட்டார்கள். இவர்களுக்கு பல விதமான ஔஷதிகள் (மருந்துகள்) கொண்டு காப்பு கட்டச் செய்தான் ராவண ராஜா. அவர்களும் ராவணனை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து வணங்கிய பின் கிளம்பினர். இந்த அறுவரும், தேவாந்தக, நராந்தக, த்ரிசிரஸ், அதிகாயன், மகா பார்ஸ்வ, மகோதரன் என்ற ஆறு பேரும் யுத்த பூமிக்கு புறப்பட்டனர். விதியின் வழி செல்லும் மதியினராக, காலத்தின் கட்டாயம் துரத்த, புறப்பட்டனர். சுதர்ஸனம் என்ற பெரிய யானை ஐராவத குலத்தில் வந்தது, கருமேகம் திரண்டு நிற்பது போல கம்பீரமாக வந்து நின்றது. அதன் மேல் மகோதரன் ஏறிக் கொண்டான். எல்லா ஆயுதங்களும், அம்புறாத் தூணியும்,  அலங்காரமாக எடுத்துக் கொண்டு யானை மீதிருந்த மகோதரன் மலை வாயில் விழ இருந்த சூரியன் போல இருந்தான்.

 

ராவணனின் மற்றொரு மகன் உத்தமமான குதிரைகள் பூட்டிய ரதத்தில் எல்லா விதமான ஆயுதங்களுடனும் ஏறினான். கையில் வில்லுடன் த்ரிசிரஸ் ரதத்தில் ஏறி நின்றதைக் காண, வான வில்லுடன் மேகம், மின்னலும், மின்மினிப் பூச்சிகளும் ஒளி கூட்ட நிற்கும் மேகம், மலையில் இறங்கியது போல இருந்தது.  மூன்று தலைகளிலும் மூன்று கிரீடங்களோடு அழகாக விளங்கினான்.  ஹிமவான் மூன்று சிகரங்களில் பொன் கவசம் அணிந்து காட்சி தந்தது போல இருந்தது.

 

ராக்ஷஸேஸ்வரனின் மற்றொரு மகன், அதிகாயன் என்பவனும் நல்ல தேஜஸ் வாய்ந்தவன். அவனும் உயர்ந்த ரதத்தின் மீது ஏறினான். அந்த ரதமே ஸ்ரேஷ்டமானது.  நல்ல சக்கரம், நன்றாக இணைத்து கட்டப் பெற்றிருந்தது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் தாராளமாக ஆயுதங்கள் வைக்கவும், அமரவும் இடங்கள் இருந்தன.  தூணிகள், பா3ணங்கள், வாள், ப்ராஸம், பரிக4ம் முதலியவை நிரப்பப்பட்டு, இருந்தது.   நுணுக்கமான பொன் வேலைப்பாடமைந்த கிரீடம்  தலையில் பிரகாசமாக விளங்கியது. மேரு மலைக்கு அலங்காரம் செய்தது போல, சூரிய கிரணங்கள் மலை மீது பட்டுத் தெறித்தாற் போல அந்த மகா பலசாலியான ராஜ குமாரன், உற்சாகமாக ரதத்தின் மீது நின்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.  நாலாபுறமும் தேர்ந்தெடுத்த ராக்ஷஸ வீரர்களுடன், அமரர்கள் சூழ நின்ற இந்திரனைப் போல இருந்தான்.

 

உயர் ரக உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை வழி வந்த வெண் குதிரை, அதுவும் தங்கத்தால் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்டு, வாயு வேகம், மனோ வேகம் என்று சொல்வதற்கிணங்க, வேகமாக செல்லும் குதிரைகள் பூட்டிய, ப்ரும்மாண்டமான பெரிய ரதத்தில் ஏறினான். கையில் பாசத்துடன், அதுவே ஆகாயத்தில் தெரியும் நெருப்புத் துண்டம் போல மின்ன, நராந்தகன் ஏறிக் கிளம்பினான். சக்தியை ஏந்தி, குகப் பெருமாள் மயில் வாகனத்தில் வந்தது போல, தேவாந்தகன் வஜ்ரம் போன்ற பரிகம் என்ற ஆயுதத்தை கையில் ஏந்தி விஷ்ணுவின் உருவத்துடன் போட்டியிடுவது போல அழகிய சரீரத்துடன், ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கிளம்பினான். பெரிய உருவமுடைய மகா பார்ஸ்வன்,  க3தை4யை எடுத்துக் கொண்டான். கையில்  க3தை4யுடன், போர்க் களத்தில் குபேரன் வந்து நின்றது போல நின்றான்.

 

இவ்வளவு ஏற்பாடுகளுடன் அனைவரும் புறப்பட்டனர்.  அமராவதியில் தேவர்கள், படையுடன், ஈ.டு இணையில்லாத வீரர்களுடன் கிளம்பியது போல, யானைகளும், குதிரைகளும், ரதங்களும், ஆயுதம் ஏந்திய ராக்ஷஸ வீரர்களுமாக, போர்க் கோலம் பூண்டு, ராக்ஷஸ சேனை கிளம்பியது. ராவணன் பிள்ளைகள் நால்வரும், சூரியனுக்கு சமமான தேஜஸுடன், கிரீடம் அணிந்தவர்களாக, லக்ஷ்மீகரமாக, ஆகாயத்தில் பிரகாசமாகத் தெரியும் க்ரஹம் போல கிளம்பினர். அவர்களுடைய வெண் கொற்றக் குடைகள் வரிசையாக, சரத் கால வானில் ஹம்ஸங்கள் வரிசையாகச் செல்வது போலத் தெரிந்தன.   சத்ருக்கள் தோல்வி அல்லது தங்கள் மரணம் என்று நிச்சயம் செய்து கொண்டது போல அந்த  வீரர்கள் கிளம்பினர்.    தாங்களே விரும்பி ஏற்றுக் கொண்ட போர். கர்ஜனை செய்வதும், பெருங்குரலில் ஜய கோஷம் செய்வதும், அவ்வப்பொழுது அம்புகளை வீசிக் கொண்டும், பிடித்துக் கொண்டும், யுத்தம் ஒன்றே நினைவாக, அதுவே வெறியாக சென்றனர். அவர்களது தோள் தட்டும் ஒசையிலும், போர் முழக்கம் செய்யும் ஓசையிலும், வசுந்தரா (பூமி) நடுங்கினாள். ராக்ஷஸர்கள் சிங்க நாதம் செய்ததில், மேலே ஆகாயத்தை கிழிப்பது போல இருந்தது. மகா பலசாலியான அந்த ராக்ஷஸ வீரர்கள், இப்படி போர் செய்ய என்று வெளி வருவதில் மகிழ்ந்தவர்களாக காணப்பட்டார்கள். எதிரில் வானர சைன்யத்தைக் கண்டனர். ஒவ்வொன்றும் கைகளில் பாறாங்கல்லையோ, மரக் கிளையையோ வைத்துக் கொண்டு நின்றன. அவர்கள் ராக்ஷஸ சேனை ஆரவாரமாக வருவதைக் கண்டனர். யானைகளும், குதிரைகளும், ரதங்களும், நூற்றுக்கணக்கான மணிகள் ஓசையிட வருவதைக் கண்டனர். கார் மேகம் போலவும், உயர்ந்த வகை ஆயுதங்கள் ஏந்தியபடி, வருவதைக் கண்டனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல நாலா புறமும் ராக்ஷஸ வீரர்கள் நிரம்பி வழிவதைக் கண்டனர். இவர்கள் வருவதைப் பார்த்து வானரங்கள் அவர்களுக்கு இணையாக தாங்களும் ஜய கோஷம் செய்தனர். ராக்ஷஸர்களும் இவர்களைப் பார்த்து, மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை பொறுக்காத குணம் உடையவர்கள், தாங்களும் அதற்கு மேல் ஜய கோஷம் செய்தனர். அவர்களுக்கிடையில் புகுந்து வானரங்கள், கற்களாலும், மரக் கிளைகளாலும் அடித்து, போரைத் துவக்கினர். கற்களுக்கு இறக்கை முளைத்தது போல இருந்தது. சிலர் ஆகாயத்தில் நின்று, சிலர் பூமியில் நின்று, ராக்ஷஸ வீரர்களை எதிர்த்தனர். கிளைகளுடன் கூடிய பெரிய மரங்களையே  வெட்டிக் கொண்டு வந்து வானரங்கள் மிக பயங்கரமாக போரிட்டன. ராக்ஷஸ, வானர வீரர்களின் இடையில் போர், பயங்கரமாக, சளைக்காமல் தொடர்ந்து நடந்தது.

 

தங்கள் மேல் வந்து விழும் மரங்களையும், கற்களையும் ராக்ஷஸ வீரர்கள், பாணங்களால் தடுத்து நிறுத்திஎ விட்டனர். இரு பக்கமும் சிம்ம நாதமாக கர்ஜிப்பது கேட்டது.  ராக்ஷஸர்களை வானரங்கள் கற்களால் அடித்து, தூள் தூளாக்கினர். கவசம் ஆபரணம் இவற்றையும் மீறி ராக்ஷஸர்கள் படு காயமடைந்தனர். ரதங்களின் மேல் இருந்தவர்களையும், யானை குதிரைகள் மேல் இருந்தவர்களையும் கீழே   தள்ளி கண் மண் தெரியாமல் அடித்தனர். கற்கள், தங்கள் முஷ்டி இவைகளே ஆயுதங்கள். ராக்ஷஸர்களும் கூர்மையான பாணங்களால் வானரங்களை அடித்து வீழ்த்தினர். கீழே விழுவதும், ஓடுவதும், அலறுவதுமாக யுத்த பூமி கலங்கியது. சூலம், முத்கரம், கட்கம், ப்ராஸம், சக்தி என்ற ஆயுதங்களை இடைவிடாது பிரயோகித்து ராக்ஷஸர்களும் சளைக்காது யுத்தம் செய்தனர். வெற்றியே குறிக்கோளாக, இரண்டு பக்கத்தினரும் ஒருவரையொருவர் வீழ்த்திக் கொண்டிருந்தனர். வானர, ராக்ஷஸ வீரர்கள் எல்லோரும்  எதிரியின் கையில் கல்லாலோ, கத்தியாலோ காயம் அடைந்து ரத்தப் பெருக்கோடேயே காணப்பட்டனர். சற்று நேரம் கற்களும் கத்தியுமே அந்த யுத்த பூமியை நிறைத்து இருந்தது போல காட்சியளித்தது.  மலை போன்ற பெருத்த சரீரம் உடைய ராக்ஷஸர்கள் இறைந்து கிடந்தனர். யுத்த வெறி கொண்டவர்களே பூமியில் நிறைந்து இருந்தனர். சிலர் கையில் இருந்த சூலத்தை பிரயோகிக்கும் நிலையிலும், சிலர் வெற்றி கரமாக சூலம் முதலிய ஆயுதங்களை உபயோகித்த நிலையிலும், ஒரு சிலர் கையில் ஆயுதம் எடுத்த உடனேயே வானரங்களால் உடைக்கப் பெற்ற ஆயுதங்களுடனும் காணப்பட்டனர். வானரங்களைக் கொண்டே வானரங்கள் அடிபடும்படி ராக்ஷஸர்கள் செய்தால், வானரங்களும், ராக்ஷஸர்களே தங்களுக்குள் அடித்துக் கொள்ளும்படி செய்தனர். அவர்கள் வீசிய கற்களைக் கொண்டே அவர்களை ராக்ஷஸர்கள் வீழ்த்தினர். அதே போல அவர்கள் பிரயோகித்த சஸ்திரங்களையே ராக்ஷஸர்களை வதைக்கப் பயன் படுத்திக் கொண்டனர். ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிம்ம நாதம் செய்வதும், பரஸ்பரம் ஆயுதங்களால் அடித்துக் கொள்வதும், பால் வடியும் மரங்களைப் போல, ரத்தம் பெருக, விடாது போர் புரிந்தனர்.

 

கை கால் உடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள், இரு தரப்பிலும் சேதம் சமமாகவே இருந்தது. ரதத்தை, ரதத்தால், யானையோடு யானை, குதிரையோடு குதிரை என்று மடிந்து விழுந்தன. எல்லோரும் யுத்தம் செய்வதில் மகிழ்ச்சியுடனேயே இருந்தனர். வானரங்களுக்கு மரங்களே முக்யமான ஆயுதம்,. ராக்ஷஸர்கள் க்ஷிப்ரம், அர்த்த சந்திரம், பல்லம் போன்ற கூர்மையான ஆயுதங்களை உபயோகித்தனர். இவர்கள் வீசும் கற்களையும், மரங்களையும் தங்கள் மேல் விழு முன் அம்புகளால் தடுத்து தகர்த்து விட்டனர். இரு தரப்பிலும் அடிபட்டு விழுந்த வீரர்கள் பூமியை மறைத்தபடி கிடந்தனர். வானரர்கள், கர்வமும் மகிழ்ச்சியும் பொங்க, யுத்த பயம் சிறிதும் இன்றி, ராக்ஷஸர்களுடன் தயங்காமல் போர் புரிந்தனர். ராக்ஷஸர்கள் தோற்று, வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பொழுது, தேவ கணங்களும் மகரிஷிகளும் கூடவே ஆரவாரம் செய்தனர். வாயு வேகத்தில் செல்லும் குதிரைகளின் மீதேறி, கூர்மையான சக்தியையும் கையில் எடுத்துக் கொண்டு நராந்தகன், பெருங்கடலில் மீன் பாய்ந்து செல்வது போல, வானர சைன்யத்தினுள் நுழைந்தான். எழுநூறு வானர வீரர்களை ப்ராஸம் கொண்டு பிளந்து தள்ளினான். ஒரு க்ஷண நேரத்தில், இந்திரனின் எதிரியான ராக்ஷஸன், வானர வீரர்களை மூர்க்கமாக தாக்கி மடியச் செய்தான். வித்யாதர மகரிஷிகள், குதிரையில் அமர்ந்து மகா கோரமாக யுத்தம் செய்யும் நராந்தகனைப் பார்த்து கவலை கொண்டனர். அவன் சென்ற வழியெல்லாம் வானர வீரர்களின் தலைகள் உருண்டன. எதிர்த்து என்ன செய்யலாம் என்று வானரங்கள் யோசித்து முடிவு எடுக்கும் முன்பே சேதம் மிக அதிகமாக ஆயிற்று. காட்டுத் தீ வனங்களை விழுங்கி பரவுவது போல, நராந்தகன் வானர வீரர்களின் மத்தியில் அக்னி போல பரவி நின்றான். வஜ்ரத்தால் அடிபட்டு மலைகள் நொறுங்கி விழுந்தது போல இவன் கை ப்ராஸத்தால் அடிபட்ட வானரங்கள், தங்கள் பாதுகாப்புக்காக மரங்களை வேரோடு பிடுங்கி கொண்டு வரும் நேரத்திலும், கற்களை பொறுக்கிக் கொண்டு வர எடுத்துக் கொண்ட நேரத்திலும், சைன்யம் மிக அதிகமாக வலுவிழந்ததை உணர்ந்தார்கள். எந்த திக்கை நோக்கினாலும், நராந்தகனே நிற்பது போலத் தெரிந்தது. ப்ராவ்ருட் காலத்தில் (மழைக்காலத்தில்) காற்று சுழன்று சுழன்று வீசுவது போல இருந்தான். வானர வீரர்களால் ஓடவும் முடியவில்லை. நின்று எதிர்க்கவும் சக்தியில்லை. பயத்தால் ஸ்தம்பித்து நின்றனர். கீழே விழுபவர்களை, நிற்பவர்களை சென்று கொண்டிருப்பவர்களை என்று பார்த்த மாத்திரத்தில் நராந்தகன் அடித்து வீழ்த்தினான். ஆதித்யனுக்கு இணையான ஒரே ஒர் ப்ராஸம் என்ற ஆயுதம் கையில் ஏந்தி, நராந்தகன் அபாரமான துணிச்சலுடனும், வீரத்துடனும், சுழன்று சுழன்று அந்தகனாகவே காட்சி தந்தான். கை கால் பின்னமான வானரர்கள் கூட்டம் கூட்டமாக பூமியில் விழுந்தன. எதுவும் செய்ய முடியாத நிலையில் அழுது புலம்பின. அந்த அழுகையே பெரும் சத்தமாக ஆயிற்று. வஜ்ரத்தால் அடிக்கப் பெற்று, இறக்கைகள் கீழே விழ நின்ற மலைகள் போல இந்த வானரங்கள் கிடந்தன. முன்னால் கும்பகர்ணன், நினைவிழக்கச் செய்து கிடத்தியிருந்த தலைவர்களான வானரங்கள் இப்பொழுது சுய நினைவு திரும்பப் பெற்று, சுக்ரீவனிடம் சென்றார்கள். நராந்தகனிடம் நடுங்கியபடி வந்த தன் வானர சைன்ய படைத் தலைவர்களை சுக்ரீவன் கண்டவுடன் நிலைமையைப் புரிந்து கொண்டான். நாலா புறமும் சிதறி ஓடும் வானரங்களைப் பார்த்து, காரணன் நராந்தகன் தான் என்றும் தெரிந்து கொண்டான். குதிரையின் மேல் வசதியாக அமர்ந்தபடி, கையில் ப்ராஸத்துடன் உலவும் நராந்தகனை சுக்ரீவன் கண்டான்.  குமாரனான அங்கதனைப் பார்த்து இந்திரனுக்கு சமமான விக்ரமம் உடைய வீரனே, நீ கிளம்பு. இதோ இந்த குதிரையில் ஆரோஹணித்து யுத்தம் செய்யும் ராக்ஷஸனை எதிர் கொள். இவனால்  நம் படை க்ஷீணமடைந்து விட்டது. இவனை உயிரோடு இருக்க விடாமல் அடித்து, நகர்த்து. உடனே அங்கதன் புறப்பட்டான். சந்திரன் தன் மேக கூட்டமே படை பலமாக புறப்பட்டது போல, மேகம் ஆகாயத்தில் சஞ்சரிப்பது போல சஞ்சரிக்கும் வீரர்களுடன் போர்க் களத்தில் குதித்தான். வானரோத்தமனான அங்கதன் தன் உடலில் அணிந்திருந்த அங்கதம் எனும் ஆபரணத்தோடு எந்த வித ஆயுதமுமின்றி தன் நகமும், பற்களுமே ஆயுதமாக, நராந்தகனை நெருங்கினான். நில், நில், சாதாரண அடி மட்ட போர் வீரர்களை ஏன் வதைக்கிறாய்.  வஜ்ரம் போன்ற உன் ப்ராஸத்தை என் மார்பில் பிரயோகித்துப் பார் என்று கத்தியதைக் கேட்டு, பற்களால் உதட்டைக் கடித்தபடி, புஜங்கம் போல் பெருமூச்சு விட்ட நராந்தகன், அங்கதன் அருகில் வந்தான். அங்கதனை அடிக்க ப்ராஸத்தை எடுத்து மார்பில் படும்படி ஓங்கி அடித்தான். அது அவன் மார்பில் பட்டு உடைந்து விழுந்தது.  ப்ராஸம் உடைந்து விழுந்ததைக் கண்ட அங்கதன் முஷ்டியால் நராந்தகனின் குதிரையை தாக்கி விழச் செய்தான். தாடையில் பலமான அடி பட, துடிக்கும் உதடுகளும், நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டு நிற்க, கண்கள் மயங்க, அந்த உயர் ஜாதி குதிரை, மலை போன்று உயர்ந்து நின்ற குதிரை தடாலென்று பூமியில் விழுந்தது. தன் குதிரை அடிபட்டு விழவும், நராந்தகன் ஆத்திரத்தில் தன்னை மறந்தான். தானும் முஷ்டியை உயர்த்திக் கொண்டு அங்கதன் தலையில் ஓங்கி அடித்தான். அங்கதன் இந்த அடியைத் தாங்க மாட்டாமல் சற்று நேரம் கண்கள் மயங்க நின்றான். பின்  சமாளித்துக் கொண்டு, தானும் முஷ்டியால் நராந்தகன் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இந்த அடி பலமாக விழுந்து நராந்தகன் செயலிழந்தவன் போல ஆனான். ரத்தம் பெருகியது. தடாலென பூமியில் விழுந்தான்.  வஜ்ரத்தால் பிளக்கப் பட்ட மலை ஒன்று கீழே விழுந்தது போல விழுந்தான். உடனே அந்தரிக்ஷத்தில் உத்தமமான தேவர்களும், பூமியில் வானரங்களும் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம் அந்த பூமியை நிறைத்தது. அங்கதனால் நராந்தகன் அடி பட்டு விழுந்தான் என்ற செய்தி உடனே பரவியது.  ராமர் மனம் மகிழ நாம் ஒரு வீரச் செயலை செய்து விட்டோம் என்று வாலிபுத்திரன் அங்கதனும் மன நிறைவோடு மேலும் உற்சாகமாக போர் செய்ய முனைந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நராந்தக வத4: என்ற அறுபத்து  ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 70 (477) தேவாந்தகாதி வத: (தேவாந்தகன் முதலானோர் வதம்)

 

நராந்தகன் இறந்து விழுந்ததைப் பார்த்த ராக்ஷஸர்கள் அலறினார்கள். தேவாந்தகனும், த்ரிசிரஸHம், புலஸ்தியர் குமாரனான மகோதரனும், பெரிதும் வருந்தினர். மேகம் போன்ற பெரிய யானையில் ஏறி வந்த மகோதரன், வாலி புத்திரனை துரத்தினான். தன் சகோதரன் அடிபட்டதால் கலங்கிய தேவாந்தகனும் கூர்மையான பரிகம் எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கதனைத் துரத்தினான். சூரியனுக்கு சமமான அழகிய ரதத்தில் பவனி வந்த த்ரிசிரஸ், உத்தமமான குதிரைகள் பூட்டிய ரதத்தை அங்கதன் இருக்கும் இடம் திருப்பினான். மூன்று பேருமே தேவர்களின் கொட்டத்தை அடக்கியவர்கள். மூன்று பேருமே நல்ல வீரர்கள்.  மூவரும் ஒன்றாக துரத்தவும், வாலி புத்திரன் அங்கதன், ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி வைத்துக் கொண்டான். முதலில் கிளைகளுடன் கூடிய மரத்தை தேவாந்தகன் மேல் வீசினான். பார்த்துக் கொண்டிருந்த த்ரிசிரஸ் அதை தன் அம்புகளால் தூள் தூளாகச் சிதறச் செய்தான். மரம் தூளாவதைப் பார்த்து அங்கதன் தாவி குதித்து ஆகாயத்தில் நின்றபடி மரக்கிளைகளையும், கைக்கு கிடைத்த கற்களையும் வீசினான். த்ரிசிரஸ் அதையும் தன் அம்புகளால் தடுத்து யார் மேலும் படாதபடி தடுத்துக் கொண்டான். தேவாந்தகன் தன் பரிகத்தாலும், எந்த கல்லும் தங்கள் மேல் படாமல் தடுத்து நிறுத்தி விட்டான். பின், மூவரும் வாலி புத்திரனைத் துரத்தினர்.  தன் யானையின் மேல் வேகமாகச் சென்று, மகோதரன், அங்கதன் மார்பில் வஜ்ரம் போன்ற தோமரத்தால் அடித்தான். வேகமாக தொடர்ந்து வந்த தேவாந்தகனும் தன் பரிகத்தால் கோபத்துடன் ஒரு அடி அடித்தான். மூவரும் ஒரே  சமயத்தில் தாக்கிய போதும் அங்கதன் கலங்கவில்லை. இன்னமும் வேகமாக ஓடினான்.  தன் கைத்தலத்தால் ஓங்கி யானையை அடித்தான். மகா பலத்துடன் வீசப் பட்ட அந்த அடி யானையின் கண்களைத் தெறித்து விழச் செய்தது. யானை பயங்கரமாக அலறியது. அதனுடைய தந்தத்தை திருகி எடுத்து அதைக் கொண்டே தேவாந்தகனைத் துரத்திச் சென்று அடித்தான். அவன் உடல் முழுவதும் வெல வெலக்க, காற்றினால் அலைக் கழிக்கப் பட்ட மரம் போல ஆனான்.  லாக்ஷா ரஸம் (அரக்கு குழம்பு) போன்ற வர்ணத்தில் முகத்திலிருந்து (வாயிலிருந்து) ரத்தம் கொட்ட நின்றான். இருந்தும் சமாளித்துக் கொண்டு தன் பரிகத்தால் அங்கதனை ஓங்கி அடித்தான். பரிகம் அவனை கீழே தள்ளிய போதிலும், முழங்கால் பலத்தில் விழுந்த அங்கதன், உடனே சமாளித்துக்கொண்டு எழுந்து நின்று கொண்டான். திரும்ப ஆகாயத்தில் தாவி குதித்து நின்றான். த்ரிசிரஸ் அதைக் கண்டு கூர்மையான பாணங்களை பிரயோகம் செய்து அங்கதனை வீழ்த்த முயன்றான். வானரத் தலைவனான வாலி புத்திரனின் நெற்றியில் ஒரு அடி செம்மையாக விழுந்தது. மூவருமாக அங்கதனை தாக்கிக் கொண்டிருப்பதையும் அங்கதன் ஒருவனாக சமாளிக்கத் திணறுவதையும் ஹனுமானும், நீலனும் கண்டு, உதவிக்கு விரைந்தனர்.

 

நீலன் கையிலிருந்து பாறாங்கல்லை திரிசிரஸ் மேல் போட்டான். ராவணனின் புத்திரன் அதை அம்புகளால் தூளாக்கினான். நூறு பாணங்களால் பொடியாகிப் போனது. அந்த மலைக் கல் பொடிப் பொடியாக உதிரும் பொழுது தீக்கனல்கள் தெறித்தன. ஹனுமான் செய்த ஹுங்காரத்தால் கவனம் திரும்பிய தேவாந்தகன், அங்கதனை விட்டு ஹனுமானைத் தொடர்ந்து சென்றான். அருகில் வரும் வரை காத்திருந்து ஹனுமான் அவனை முஷ்டியினால் ஓங்கி அடித்தான். அவன் தலையில் ஓங்கி அடித்ததோடு, பெரிய குரலில் ஜய கோஷம் செய்தது ராக்ஷஸர்களை நடுங்கச் செய்தது. முஷ்டியால் தாக்கிய வேகத்தில் பற்களும், கண்களும் தெறித்து விழ, நாக்கு வெளியே துறுத்திக் கொண்டு தலை சுற்றி கீழே விழுந்த தேவாந்தகனின் உயிர் பிரிந்தது.  தடாலென பூமியில் விழுந்தான். முக்யமான ராக்ஷஸ வீரர்களுள் ஒருவனான தேவாந்தகன் மாண்டு விழுந்ததும், த்ரிசிரஸ் மிகவும் ஆத்திரத்தோடு நீலன் மேல் பாணங்களை பிரயோகம் செய்யலானான்.  அம்புகளை மழையாக பொழியலானான். மகோதரனும் மிகுந்த கோபத்துடன், மலை போன்ற தன் யானையின் மேல் திரும்ப ஏறிக் கொண்டு, சூரியன் மந்தர மலையில் ஏறுவது போல நீலனை தாக்க ஆரம்பித்தான். மின்னலே சக்ரமாகவும், வில்லாகவும் ,  மழை மேகம் மலையின் மேல் நீரை பொழிவது அம்புகள் போலவும், நீர் தாரை இடைவிடாது விழுவது போல அவனது அம்புகள் நீலன் மேல் விழுந்தது.  நீலன் இந்த சர மழையைத் தாங்க முடியாமல் தவித்தான். ஸ்தம்பித்து நின்று விட்டான். சற்றுப் பொறுத்து நினைவு திரும்பியதும், தன் பலத்தையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு கல்லை எடுத்து, மிக வேகமாக மகோதரனின் தலையில் அடித்தான். சரியான இடத்தில் இந்த கல் தாக்கவும், மகோதரன் அந்த க்ஷணமே உயிர் பிரிந்தவனாக, யானையின் மேலிருந்து கீழே விழுந்தான்.

 

தன் தந்தை வழி உறவினன் (தந்தையின் சகோதரன்) அடிபட்டு விழுவதைப் பார்த்து த்ரிசிரஸ் வில்லை கையில் எடுத்துக் கொண்டு ஹனுமானைத் துரத்தினான். ஹனுமானை குறி வைத்து  பல விதமாக பாணங்களை சரமாரியாக பொழிந்தான். வாயு புத்திரன் கையில் இருந்த ஆயுதமோ, மலையில் பொறுக்கிக் கொண்டு வந்த பாறையே. இந்த பாறைக் கற்களை திரிசிரஸின் அம்புகள் பொடியாக்கின. அதனால் இந்த கற்கள் உபயோகமில்லை என்று எண்ணி ஹனுமான், மரக் கிளைகளை எடுத்து வந்து அடிக்கத் தயாராக ஆனான். இவைகளையும் த்ரிசிரஸ் தன் பாணங்களால் விலக்கி விட்டு ஜய கோஷம் செய்தான். இதன் பின் ஹனுமான், தன் நகங்களால், ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளைத் தாக்கினான். சிங்கம், யானையை தாக்குவது போலத் தாக்கினான். ராவணாத்மஜன் த்ரிசிரஸ், காலந்தகன் போல சக்தியைப் பிரயோகித்தான். அதை எதிர் கொண்டு ஹனுமான், கைகளால் உடைத்து எறிந்தான். சக்தி வாய்ந்த சக்தி ஆயுதத்தை ஹனுமான் கைகளால் உடைத்து எறிந்ததைக் கண்டு வானர வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதைக் கண்டு ராக்ஷஸ ராஜ குமாரன், தன் வாளை எடுத்துக் கொண்டான்.  ஹனுமானின் மார்பில் அதைக் கொண்டு பலமாக குத்தி வீழ்த்த முயன்றான். தன் மேல் வாளால் குத்தும் த்ரிசிரஸை, கைத்தலத்தால் ஹனுமான் ஓங்கி அடித்தான். இந்த அடியை தாங்க மாட்டாமல் த்ரிசிரஸ், கைகளிலிருந்த ஆயுதங்கள் நழுவ, பொறி கலங்கி நினைவு இன்றி, பூமியில் சரிந்தான். விழும் அவன் கை வாளை பிடுங்கிக் கொண்டு ஹனுமான் உரத்த குரலில் சிம்ம நாதம் செய்தான். இந்த நாதத்தைக் கேட்கப் பொறுக்காமல், ராக்ஷஸ ராஜ குமாரன் சட்டென்று எழுந்து ஹனுமானின் பேரில் முஷ்டியால் பலமாகத் தாக்கினான். முஷ்டியினால் அடிக்கப் பெற்ற ஹனுமான் ஆத்திரத்துடன் ராக்ஷஸ ராஜ குமாரனை கிரீடத்தில் பிடித்து உலுக்கியபடி, கோபத்தில் சிவந்த கண்களோடு, கையிலிருந்த வாளால், குண்டலங்களுடன் அழகாக விளங்கிய தலையை கிரீடத்துடன் சேர்த்து வெட்டித் தள்ளினான். த்வஷ்டாவின் மகனை முன்னொரு சமயம் இந்திரன் ஆத்திரத்துடன் வெட்டிச் சாய்த்தது போல சாய்த்து விட்டான். நீண்ட கண்களும், ஒளி வீசும் வைஸ்வானர அக்னி போன்ற லோசனங்கள், தலையுடன் பூமியில் விழுந்தது.

 

சூரியனுடைய மார்கத்திலிருந்து ஒளி மிகுந்த பொறிகள் விழுவது போல விழுந்தன. ஹனுமான் த்ரிசிரஸை வதைத்து விட்டான் என்ற செய்தி பரவவும், ராக்ஷஸர்கள் ஓடலாயினர். உரத்த குரலில் வெற்றி முழக்கம் செய்த வானரங்கள் அவர்களைத் துரத்தி அடித்தனர். த்ரிசிரஸ் இறந்து பட்டான், மகோதரனும் யுத்த பூமியில் மாண்டான்.  தேவாந்தக நராந்தகர்களும் நல்ல வீரர்கள், அவர்களும் தோற்று உயிர் இழந்தனர் என்ற செய்தி கேட்டு, ராவணன் தம்பி மகா பார்ஸ்வன் பெரும் ஆத்திரம் கொண்டான். கையில்  க3தை4யை எடுத்துக் கொண்டு, தன் உடலில் காயங்களையும், ரத்தப் பெருக்கையும் பொருட்படுத்தாமல், சிவந்த மாலை ஒளி வீச, நின்றிருந்த ஐராவத, மகா பத்ம யானைகளுக்கு சமமான தன் பட்டத்து யானையில் மேல் ஏறி யுத்த வெறியுடன், வேகமாக வானர வீரர்களை அழிக்க கிளம்பினான். யுக முடிவில், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு ஓடினான். ராவணன் சகோதரன் மகா கோபத்துடன் வருவதையறிந்து ஹனுமான் அவனை எதிர் கொண்டு ஓடினான். எதிரில் பர்வதம் போல வந்து நின்ற ஹனுமானின் மார்பில் தன்  க3தை4யால் ஓங்கி அடித்தான், மகா பார்ஸ்வன். வஜ்ரம் போன்ற அந்த  க3தை4யை முழு பலத்துடன் தாக்கியதில் ஹனுமான் மார்பிலிருந்து ரத்தம் கொட்டியது. சற்று நேரம் நிலை தடுமாறிக் கலங்கிய ஹனுமான் சமாளித்துக் கொண்டு உதடுகள் துடிக்க, மகா பார்ஸ்வனைப் பார்த்தான். கைகளுக்கு இடையில் வேகமாகச் சென்று எதிர்பாராத சமயம், அவன் மேல் முஷ்டியால் ஓங்கி ஒரு குத்து விட்டான். வேரறுந்த மரம் போல அவன் அந்த அடி தாங்க மாட்டாமல் கீழே விழுந்தான். அவன் கையில் இருந்த யம தண்டம் போன்ற  க3தை4யை எடுத்து ஹனுமான், மகிழ்ச்சியுடன் நின்றான். சற்று நேரத்தில் நினைவு தெளிந்து எழுந்த ராக்ஷஸன், திடுமென எழுத்து வருணனின் புத்திரனான நீலனைத் தாக்கினான். அவனுடைய  க3தை4யாலேயே ஹனுமான், அந்த ராக்ஷஸ வீரனை பலமாக அடித்து நொறுக்கி, தன் க3தை4யாலேயே அடிபட்டு, பற்களும், கண்களும் விழ, பூமியில் விழச் செய்தான். மலைகளை இந்திரன் வஜ்ரத்தால் வெட்டி வீழ்த்திய பொழுது விழுந்த மலைகளுள் ஒன்று போல வீழ்ந்தான்.

 

இந்த ராக்ஷஸ வீரன் மாண்டு விழுந்ததும், ராக்ஷஸ சேனை மிகவும் கலக்கமுற்றது. கண் எதிரில் மாண்டு விழுந்த சகோதரனைப் பார்த்து, ராவணனின் மற்றொரு சகோதரன், அடக்க மாட்டாத கோபத்துடன் பாய்ந்து வானர சைன்யத்துள் புகுந்து நாசம் செய்யலானான். மேலே வந்து விழும், பெருத்த சரீரம் உடைய ராக்ஷஸனைப் பார்த்து, கவாக்ஷன், பாறாங்கல்லை தூக்கிக்கொண்டு அவனை அடிக்க ஓடினான். உன்மத்தம் பிடித்தவன் போல, பெரிய மலை நகருவது போல, ஓடி வரும் ராக்ஷஸனின் தாக்குதலைத் தாங்க முடியாமல், வானர சைன்யம் கலங்கியது. ராக்ஷஸனின் பாணத்தால் கையில் இருந்த கல் தூள் தூளாகிப் போனதைப் பார்த்து, கவாக்ஷன் திகைத்தான். திரும்பத் திரும்ப ஜய கோஷம் செய்தான். ராக்ஷஸன், கோபம் கொண்ட நிலையில் பயங்கரமாக தோற்றமளிப்பவன், இப்பொழுது வெறி பிடித்தவன் போல சுழன்று சுழன்று தாக்கினான். கையில் க3தை4யுடன் எதிர்ப்பட்ட வானரங்களின் மார்பில் அடித்தான், கவாக்ஷனும் அதன் அடி தாங்க மாட்டாமல் ரத்தம் பெருகி ஓட விழுந்தான். சற்று பொறுத்து நினைவு தெளிந்து எழுந்து அந்த ராக்ஷஸன், தலையில் தன் கைகளால் பலமாக மொத்தினான். கவாக்ஷனின் கைகளால் அடித்தது, ராக்ஷஸனை நினைவிழக்கச் செய்தது. அவன் விழுந்தான். ராவண சகோதரன் இவனும் உயிர் இழந்ததைக் கண்டு ராக்ஷஸ சைன்யம் தப்பினோம், பிழைத்தோம் என்று ஓட்டம் எடுத்தன.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தேவாந்தகாதி வத4: என்ற எழுபதாவது அத்தியாயத்தின் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 71 (478) அதிகாய வத4: (அதிகாயனின் வதம்)

 

தங்கள் சைன்யம் பயந்து சிதறி ஓடுவதையும், சகோதரர்கள், சிற்றப்பன்மார் இறந்து விழுந்ததையும் கண்டு யுத்த வெறியுடன் வீரர்களான இருவரும் கடைசி வரை போரிட்டு மடிந்ததையும், பார்த்த அதிகாயன், மிக்க மன வருத்தமும் ஆத்திரமும் அடைந்தான்.  இவனுக்கு ப்ரும்மா கொடுத்த வரம் இருந்தது. தேவ தானவர்களின் கர்வத்தை அடக்கக் கூடியவன். மலை போன்ற பெரிய சரீரம் உடையவன். சூரியனை பழிக்கும் பிரகாசமான ஒரு ரதத்தில் ஏறிக் கொண்டு இந்திரசத்ருவான அந்த ராக்ஷஸ குமாரன், போருக்குப் புறப்பட்டான். தன் பெரிய வில்லை எடுத்து நாணை விரல்களால் மீட்டி பெரும் சத்தம் வரச் செய்தான். குண்டலங்கள் பள பளக்க, கிரீடம் அணிந்தவனாக தன் பெயர் சொல்லி உரத்த குரலில் ஜயகோஷம் செய்தான். சிம்ம கர்ஜனை போன்ற அந்த முழக்கமும், தன் பெயர் சொல்லி போருக்கு அறை கூவி அழைத்ததும், உரத்த குரலில் செய்த ஜயகோஷமும், வானரங்களை நடு நடுங்கச் செய்தன. அவன் உடலைக் கண்டு, கும்பகர்ணன் திரும்ப வந்து விட்டானோ என்று குழப்பம் அடைந்தன.  ஒருவரையொருவர் நெருங்கி நின்று கொண்டு பயத்துடன் நின்றன. வாமனாவதார சமயம், த்ரிவிக்ரமனாக, வானளாவி நின்ற விஷ்ணுவின் ரூபம், போன்ற இவனுடைய ரூபத்தைப் பார்த்து பயத்துடன் மூலைக்கு மூலை ஓடி ஒளிந்தன. லக்ஷ்மணாக்ரஜன், ராமனை சரணம் அடைந்தன. அதிகாயன் வந்திருக்கிறான், என்ன செய்வது? என்று கேட்டு பணிவாக நின்றன. காளமேகம் போல கர்ஜிக்கும் அதிகாயன், ரதத்தில் ஏறி, வருவதை வெகு தூரத்திலிருந்தே காகுத்ஸன் கண்டான். பர்வதம் போன்ற அவன் அதிகாயன் தான் என்று நிச்சயம் செய்து கொண்டு, ராகவனும் ஆச்சர்யத்துடன் விபீஷணனை வினவினார். யார், இது? மலை போல வளர்ந்து நிற்கிறான். கையில் வில்லும், சிறிய கண்களுமாக ஆயிரம் குதிரைகள் பூட்டிய விசாலமான ரதத்தில் வருகிறான். ப்ராஸ, தோமரங்கள், கூர்மையான பாணங்கள், இவற்றுடன், பிரகாசமாக விளங்கும் ஆயுதங்களுடன், பூத கணங்கள் சூழ, மகேசனே வந்தது போல வருகிறானே. காலனின் நாக்கு நீண்டு வந்தது போல இவன் ரதம், சக்தி ஆயுதம் இவைகளுடன் வருகிறான். மேகம் மின்னலுடன் கூடியுள்ளது போல காட்சி தருகிறான். இவனுடைய வில்லும், அம்பும் தயாராக இருக்கின்றன. எந்த நிமிஷமும் அடிப்பான். இவைகளும், இந்திர தனுஷ், ஆகாயத்தில் சோபையுடன் விளங்குவது போல இவன் ரதத்துக்கு சோபையைத் தருகின்றன. ராக்ஷஸ சார்தூலனான இவன் யார்? ரண பூமியே இவனால் பிரகாசமாகிறது. ரதி (ரதம் ஓட்டுபவன்) ஸ்ரேஷ்டனான இவன் ரதமும் ஆதித்யனைப் போல தேஜஸுடையது. த்வஜத்தில் ராகுவை பிரதிஷ்டை செய்து கொண்டிருக்கிறான். சூரிய கிரணங்கள் போன்ற இவன் பாணங்கள் பத்து திசைகளிலும் பாய்ந்து செல்லக் கூடியவை. மூன்று இடங்களில் வளைந்து, மேகம் இடி இடிப்பது போன்ற ஓசையெழுப்பக் கூடியதாக, பொன்னால் அலங்கரிக்கப் பட்டதாக, இவன் வில்லும், இந்திரனின் வில் போன்றே ஒளி வீசுகிறது. மகா ரதியான இவன், த்வஜம், பதாகம், அனுகர்ஷம் இவைகளுடன், நான்கு சாரதிகள் ஓட்ட மேகம் போல கர்ஜிக்கிறான். இவனுடைய ரதத்தில் இருப்பது, பத்து, எட்டு என்று தூணிகளும், அம்புகளும், புத்தம் புதியவைகள், அலங்கார வேலைப்பாடுகளுடன், நுனி கூர்மையாக செய்யப் பட்டுள்ளன. ரதத்தின் இருபுறமும், இரண்டு பெரிய வாள் தொங்குகின்றன. நான்கு முழம் அகலமும், பத்து முழம் நீளமும் உள்ளவை. கழுத்து பாகம் சிவந்து தெரிகிறது. பெரிய மலை போன்ற உருவம் உடையவை. காலனே மகா கால சமயம் மேகத்தில் வந்து நிற்பது போல வருகிறான். இரண்டு புஜங்களிலும், இவன் அணிந்துள்ள பொன்னாலான அங்கதங்கள் ஜ்வலிக்கின்றன.  ஹிமய மலை தன் சிகரங்கள் பள பளக்க நிற்பது போல நிற்கிறான். இவன் முகத்துக்கு குண்டலங்கள் அழகூட்டுகின்றன. புனர்வசு நக்ஷத்திரத்துடன் கூடிய பூர்ண சந்திரனின் ஒளி போல இருக்கிறது. இது யார் சொல், விபீஷணா, ராக்ஷஸர்களில் சிறந்தவன் இவன் என்பதில் சந்தேகமில்லை. இவனைக் கண்டு வானரங்கள் நாலா புறமும் சிதறி ஓடுகின்றன. விபீஷணன் ராமனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.

 

தசக்ரீவன் ராவணன் நல்ல தேஜஸ்வி. வைஸ்ரவனன் தம்பி. பயங்கரமான செயற்கரிய செயல்களைச் செய்வதில் விருப்பம் உள்ளவன். ராக்ஷஸர்களின் தலைவன். அவன் மகன் இவன். தான்யமாலினி என்ற மனைவியிடம் பிறந்தவன். அதிகாயன் என்ற பெயருடையவன். ராவணனுக்கு சமமான வீர்யம் உடையவன். யுத்தத்தில் இவனை அசைக்க முடியாது. பெரியவர்களை வணங்கி, சேவை செய்பவன். நல்ல கேள்வி ஞானம், வேத சாஸ்திர ஞானம் உள்ளவன். இவன் அறியாத விஷயமே இல்லை. குதிரையேற்றம், யானை, ரதம், எதுவானாலும் தன் வசத்தில் வைத்து பயன் படுத்தக் கூடியவன்.   வாளோ, வில்லோ, நன்கு பிரயோகிக்கத் தெரிந்தவன். சாம, தான, பேத, தண்டங்களையும், நியாயங்களையும், மந்த்ராலோசனையும் தெரிந்தவன். இவனுடைய ஆட்சியில் லங்கை நிர்பயமாக இருக்கக்கூடும். இவன் தோள் வலிமையில் லங்கா வாசிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். இவன் ப்ரும்மாவை ஆராதித்து, தவங்கள் செய்திருக்கிறான். நிறைய அஸ்திரங்களை பெற்றிருக்கிறான். அதைக் கொண்டு எதிரிகளை ஜயித்திருக்கிறான். ஸ்வயம்பூ இவனுக்கும் சுராசுரர்களால் கொல்ல முடியாதபடி வரங்கள் அளித்திருக்கிறார். இவன் அணிந்திருக்கும் திவ்யமான கவசமும், சூரியனுக்கு இணையான ரதமும், இவைகளைக் கொண்டு நூற்றுக் கணக்கான தேவர்களும், தானவர்களும் ஜயிக்கப் பட்டிருக்கிறார்கள். ராக்ஷஸர்களை ரக்ஷித்திருக்கிறான். யக்ஷர்களையும் வதைத்திருக்கிறான். இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தையே தடுத்து நிறுத்தியிருக்கிறான். சமுத்திர ராஜனின் பாசத்தை யுத்தத்தில் எதிர்த்து போரிட்டு வென்றிருக்கிறான். ராக்ஷஸர்களுள் ரிஷபம் போன்றவன். இவன் தான் அதிகாயன், ராவணன் மகன். தேவ தானவர்களின் கர்வத்தை அடக்கியவன். இனி உங்கள் மனதில் பட்டபடி என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவன் அம்புகள் வானர சைன்யத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும் முன், தாங்கள் சீக்கிரம் செயல்படுங்கள் என்றான்.

 

இதற்குள் அதிகாயன், வானர சைன்யத்துள் புகுந்து, தன் வில்லை பல முறை திரும்பத் திரும்ப மீட்டி பெரும் நாதம் வரச் செய்தபடி முன்னேறினான். முக்கியமாக முன்னணியில் நின்ற வானர வீரர்களே, இவனது ப்ரும்மாண்டமான சரீரத்தையும் ரதத்தையும் கண்டு பயந்து ஓடி விட்டன. குமுதனும், த்விவித மைந்தன், நீலன், சரபன் இவர்கள் ஒன்று கூடி மரக் கிளைகளையும், மலையிலிருந்து கொண்டு வந்த பாறாங்கற்களையும் வைத்துக் கொண்டு எதிர்த்தனர். அதிகாயன் தன் அம்புகளால் அந்த மரங்களையும், கற்களையும் தூள் தூளாக்கிவிட்டான். அந்த வானரங்கள் மேல் தான் பாண பிரயோகம் செய்யவும் ஆரம்பித்தான். பாணங்களின் தாக்குதலால் அடிபட்ட வானரங்கள் எதிர்க்கத் திராணி இன்றி, எதிரில் நிற்கவும் முடியாமல் சக்தியிழந்து  நின்றன. இளம் சிங்கம் மான் கூட்டத்தை சிதற அடிப்பது போல, இளமையின் கர்வமும் சேர, அதிகாயன் வானர சைன்யத்தை சிதறி ஓடச்செய்தான். யுத்தம் செய்யாமலே நின்றிருந்த பல வானரங்களும் ஓடி ராமனிடம் தெரிவித்தன. அதிகாயனும் அவைகளைத் தொடர்ந்து வந்து ராமனுக்கு எதிரில் வந்து கர்வதோடு, தன் வில்லையும் அம்புகளையும் காட்டி, போருக்கு அழைத்தான். நான் ரதத்தில் நிற்கிறேன். கையில் உயர்ந்த வில்லும், அம்புகளும் உடையவன். சாதாரண அடி மட்டத்து வீரர்களோடு போரிட மாட்டேன். யாரிடம் எனக்கு சமமான சக்தியும், தகுதியும் இருக்கிறதோ, அவன் வந்து என்னுடன் போர் செய்து பார்க்கட்டும்.  இதைக் கேட்டு பொறுக்காத சௌமித்ரி, சிரித்துக் கொண்டே தன் வில்லை கையில் எடுத்தபடி முன் வந்தான். சௌமித்ரி அமித்ர ஹந்தா- மித்ரன் அல்லாதவனை அடிப்பவன் என்பது தெரிந்ததே. தன் வில்லில் அம்பை பூட்டி நேராக எதிரில் நின்ற அதிகாயனின் பெரிய வில்லை கீழே தள்ளினான். ராக்ஷஸ வீரர்கள் பயந்து அலறியது நாலா திசைகளிலும் எதிரொலித்தது. பூமி, மலைகள், சமுத்திரம்,ஆகாயம் இவைகளும் இந்த ஒலியால் நடுங்கும்படி உரத்த குரலில் ஜய கோஷம் செய்தான். தனக்கு இணையான பலவான், சக்தி வாய்ந்தவன் என்பதை, சௌமித்ரியின் ஜய கோஷத்திலிருந்தே புரிந்து கொண்ட அதிகாயன், தன் வில்லில் கூர்மையான பாணத்தை பூட்டி கோபத்துடன் லக்ஷ்மணனை அடிக்கலானான்.  சௌமித்ரே, நீ பாலன். விக்ரமம் என்றால் என்ன என்று தெரியாதவன். நீ போ. ஏன் வீணாக காலனாக வந்து நிற்கும் என்னுடன் மோதுகிறாய். என் பாணம் வில்லிலிருந்து புறப்படும் பொழுது அதை தாங்க ஹிமவானாலும் முடியாது. அந்தரிக்ஷமோ, பூமியோ எதுவும் தாங்காது. நிம்மதியாக உறங்கும், காலாக்னியை சீண்டி எழுப்பிவிடப் பார்க்கிறாய். என் கை பாணத்தால் உயிர் இழக்காதே. வில்லை கீழே போட்டு விட்டு ஓடு. உயிரைக் காப்பாற்றிக் கொள். ஒருவேளை, போருக்கு வந்து விட்டு, புற முதுகு காட்டி திரும்பி போக இஷ்டமில்லையென்றால், இதோ என் கையால் உயிரிழந்து சடலமாக ஆவாய். யம லோகம் தான் போவாய். ஈஸ்வரனுடைய கூர்மையான பாணங்களுக்கு சமமானவை என்னிடம் உள்ள அஸ்திர சஸ்திரங்கள். இவை பல யுத்தங்களில் எதிரிகளின் கர்வத்தை ஒடுக்கியிருக்கின்றன. அதனாலேயே பொன் இழைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளன. இதோ பார், சூரிய கிரணம் போல ஜ்வலிக்கும் இந்த ஒரு அம்பே உன் உயிரைக் குடிக்கப் போகிறது. கோபம் கொண்ட ம்ருக ராஜனான சிங்கம், யானைக் கூட்டத் தலைவனை அடிப்பது போல அடித்து விடுவேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே வில்லில் அம்பை பூட்டினான். குறி பார்க்கலானான். ரோஷத்துடனும், கர்வத்துடனும் யுத்த களத்தில், அதிகாயன் பேசியதைக் கேட்டு, ராஜ குமாரனான லக்ஷ்மணனும், அதே தொனியில் அதே விதமாக கோபத்துடன் பதில் அளித்தான். வெறும் வார்த்தைகளால் ஒருவன் பெரியவனாக முடியாது. தற் பெருமை பேசி மட்டுமே ஒருவன் வீரத்தை காட்டியதாக ஆகாது. சத்புருஷர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதோ நான் வருகிறேன், வில்லும் அம்புமாக நான் எதிரில் நிற்கும் பொழுது உன் பலத்தை, ஆற்றலைக் காட்டு. துராத்மாவே, உன் செயலில் வீரத்தைக் காட்டு. வெட்டிப் பேச்சு பேசாதே. பௌருஷம் உடையவன் தான் சூரன். ரதத்தில் நிற்கிறாய். எல்லா விதமான ஆயுதங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறாய். வில் வேறு. சரங்களாலோ, அஸ்திரங்களாலோ,  உன் பராக்ரமத்தைக் காட்டு. அதன் பின் என் கூரிய பாணங்களால் உன் தலை கீழே விழச் செய்கிறேன்.  இயற்கையில் நன்கு கனிந்த  விளாம்பழத்தை மரத்திலிருந்து காற்று வீசி விழச் செய்வது போல விழச் செய்கிறேன். இதோ பார், என் பாணங்களை. புடமிட்ட தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டவை.  இவை  ரத்தத்தைக் குடிக்கப் போகின்றன. என் பாணங்கள் உன் உடலை சல்லடையாக துளைக்கப் போகின்றன. இவன் சிறுவன் என்று எண்ணி, என்னை அலட்சியப் படுத்தாதே. பாலனோ, விருத்தனோ (முதியவனோ), யுத்தம் என்று வந்தால் நான் ம்ருத்யுவுக்கு சமமானவன். பாலனான விஷ்ணுவினால், மூன்று உலகும் மூன்றடியில் அளக்கப் பட்டது தெரிந்திருக்கும். இவ்வாறு கோபத்துடன் சொல்லிக் கொண்டே வில்லில் அம்பைப் பொருத்தி குறி பார்க்கலானான். லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, அதில் நியாயம் இருப்பதையும் உணர்ந்து கொண்ட அதிகாயன், தானும் தன் வில்லும் அம்புமாக தயாரானான். இந்த யுத்தத்தைக் காண வித்யாதரர்களும், பூதங்களும், தேவர்களூம், தைத்யர்களும், மகரிஷிகளும், குஹ்யகர்களும் வந்து கூடினர்.

 

ஆகாயத்தை துளைப்பது போல கூர்மையான ஒரு பாணத்தை அதிகாயன் லக்ஷ்மணன் பேரில் எய்தான். ஆலகால விஷம் போல வந்து விழுந்த அந்த பாணத்தை லக்ஷ்மணன் அர்த்த சந்திர அஸ்திரத்தால் முறியடித்தான். தன் அம்பு முறிபட்டதைக் கண்டு அதிகாயன், ஐந்து பாணங்களைச் சேர்த்து பிரயோகித்தான். லக்ஷ்மணனைக் குறி பார்த்து இந்த பாணங்களை ராக்ஷஸன் பிரயோகம் செய்தான். இதை தன் அருகில் வருமுன்னே மற்றொரு பானத்தால் லக்ஷ்மணன் தடுத்து நிறுத்தி விட்டான். இதை தடுத்த அதே சமயம் தன் வில்லில் கூர்மையான மற்றொரு பாணத்தை பொருத்தி பிரயோகம் செய்யத் தயாரானான். தேஜஸால் நெருப்பு கங்கு போல இருந்த அந்த அஸ்திரம், இழுத்து விடப்பட்ட வேகத்தில் ராக்ஷஸனின் நெற்றியில் பட்டது. நெற்றியில் புதைந்து நின்ற அந்த பாணம் ஏற்படுத்திய காயத்திலிருந்து ரத்தம் பெருக, மலையின் மேல் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவது போல இருந்தது. லக்ஷ்மணனின் அம்பு தைத்து உண்டான வலியால் ராக்ஷஸன், சிரமப்பட்டான். த்ரிபுர க்ஷேத்திரத்தின் மேல் ருத்ர பாணம் தைத்தது போல இருந்தது. சற்று நிதானித்து சமாளித்துக் கொண்டு லக்ஷ்மணனை புகழ்ந்தான். இந்த பாணத்தை நீ பிரயோகித்ததில் இருந்து நல்ல வில்லாளி என்பது தெரிகிறது. எனக்கு சமமான வீரன் தான் நீ என்று பாராட்டினான். இவ்வாறு சொல்லி, குனிந்து தன் புஜங்களை சரி செய்து கொண்டு, ரதத்தைச் செலுத்திக் கொண்டு முன்னேறினான்.  ஒன்று, மூன்று, ஐந்து ஏழு என்று கிரமமாக அம்புகளை இடைவிடாது எடுத்தான், தொடுத்தான்,  அடித்தான்.  காலனுக்கு இணையான அந்த அம்புகள், ராக்ஷஸன் வில்லிலிருந்து புறப்பட்டன, பள பளவென மின்னின. பொன்னால் அதில் செய்யப் பட்டிருந்த அலங்கார வேலைபாடுகள், ஆகாயத்தையே ஒளி மயமாக்கியது. ராக்ஷஸன் சரமாரியாக பொழிந்ததைக் கண்டும் லக்ஷ்மணன் கலங்கவில்லை.  தானும் கூரிய பாணங்களை தன் வில்லில் பூட்டி பிரயோகித்தபடி இருந்தான். ஒரு சமயம், ராக்ஷஸன், லக்ஷ்மணனின் ஸ்தனங்களுக்கு மத்தியில் சக்தி வாய்ந்த ஒரு அஸ்திரத்தால் அடித்தான். நடு மார்பில் பட்டது அந்த அஸ்திரம். அதனால் உண்டான காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. மதம் பிடித்த யானை போல ஆனான். சட்டென்று அந்த அம்பை பிடுங்கி எறிந்து விட்டு, ஆக்னேய அஸ்திரத்தை எடுத்து தியானித்து வில்லில் பொருத்தினான், லக்ஷ்மணன். அதிகாயனும் அதைக் கண்டு சௌரம் (சூரியன் சம்பந்தப்பட்டது) என்ற அஸ்திரத்தை விட்டான். ஆக்னேய அஸ்திரம் லக்ஷ்மணனின் வில்லில் இருந்து புறப்படும் முன், அதிகாயன் சூர்யாஸ்திரத்தை விட்டு அதை அடக்கி விட்டான். இவை இரண்டும் ஆகாயத்தில் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. இரண்டு பாம்புகள் கோபத்துடன் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டது போல இருந்தது. இரண்டும் அடிபட்டு பூமியில் விழுந்தன. இரண்டு பாணங்களும் ஒளியிழந்து, சக்தியிழந்து கிடந்தன. உடனே அதிகாயன் கோபத்துடன் ஐஷீகம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்தான். சௌமித்ரி அதை ஐந்த்ரம் என்ற அஸ்திரத்தால் தடுத்தான். ஐஷீகம் பயனற்றுப் போனதைக் கண்டு அதிகாயன், ராவணாத்மஜன், யாம்யம் என்ற அஸ்திரத்தை விட்டான். அதை வாயவ்யம் என்ற அஸ்திரத்தால் லக்ஷ்மணன் முறியடித்தான். மேகம் மழை பொழிவது போல அம்புகளை கணக்கின்றி வர்ஷித்து, லக்ஷ்மணன், ராவணன் மகனை திணறச் செய்தான். அதிகாயன் அருகில் சென்று கவசத்தில், வஜ்ரம் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்த உறுதியான கவசத்தில் பட்டு அவை கீழே விழுந்தன. இந்த நிலையைக் கண்டு லக்ஷ்மணன் ஆயிரக் கணக்கான பாணங்களை ஒரே சமயத்தில் விட்டான். தன்னை பாதுகாக்கும் கவசம், எந்த பாணத்தாலும் அழிக்க முடியாத சக்தி வாய்ந்தது என்பதால் ராக்ஷஸ ராஜகுமாரன் இந்த பாண மழைக்கு அஞ்சவில்லை. கலங்காது நின்றான். தன் பங்குக்கு ஆல கால விஷத்தைக் கக்கும் ஒரு பாணத்தை எடுத்து லக்ஷ்மணன் பேரில் பிரயோகித்தான். மர்ம தேசத்தில் தாக்கிய அந்த அம்பு, லக்ஷ்மணனை முஹுர்த்த காலம் நினைவின்றி இருக்கச் செய்தது. பின் நினைவு தெளிந்து எழுந்து நான்கு உத்தமமான அஸ்திரங்களால் குதிரைகளையும், சாரதியையும் அடித்து வீழ்த்தினான். த்வஜத்தை குறி வைத்து அடித்து அது சரிந்து விழச் செய்தான். சற்றும் பதட்டம் இல்லாமல் சௌமித்ரி, தன் மேல் வந்து விழும் அம்புகளையும், அஸ்திரங்களையும், பொருட்படுத்தாமல் ராக்ஷஸனை வதம் செய்யும் உத்தேசத்தோடு யுத்தம் செய்வதில் கவனமாக இருந்தான். லக்ஷ்மணனுடைய பாணங்கள் ராக்ஷஸனின் உடலில் காயத்தை கூட ஏற்படுத்த இயலாமல் விழுந்தன. வாயு பகவான், அவன் அருகில் வந்து மெதுவாக ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினார். இவனிடம் உள்ளது யாராலும் பிளக்க முடியாத கவசம். ப்ரும்மா வரம் தந்தது. இந்த கவசம் இவனைப் பாதுகாக்கும் வரை இவன் உயிருக்கு ஆபத்தில்லை. அதனால் ப்ரும்மாஸ்திரம் போட்டு, முதலில் கவசத்தை பிள. வேறு எந்த முறையிலும் இவனை வதம் செய்ய முடியாது. நல்ல பாதுகாப்பான கவசத்தோடு கூடிய பலசாலியான எதிரி இவன் என்று வாயு பகவான் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணன், நொடியில் ப்ரும்மாஸ்திரத்தை தியானித்து, வில்லில் அம்புகளை பூட்டி எய்து விட்டான். சௌமித்ரி அந்த அஸ்திரம் பிரயோகம் செய்ய மந்த்ர ஜபம் செய்யும் பொழுது, திக்குகளில், சந்த்ர, சூரிய என்ற பெரிய க்ருஹங்கள், ஆகாயம், பூமி எல்லாமே நடுங்கின. யம தூதன் போன்ற கூரிய அம்பில் ப்ரும்மாஸ்திரத்தை ஆரோஹணம் செய்து, யுத்தத்தில் வேறு எந்த முறையிலும் வெற்றி கொள்ள முடியாத வீரனான ராக்ஷஸ ராஜ குமாரனை வதம் செய்யும் பொருட்டு அவன் மேல் பிரயோகித்தான். லக்ஷ்மணனின் வில்லிலிருந்து வரும், நெருப்பு ஜ்வாலை போல ப்ரகாசமானதும் சுவர்ணம் போலும், உத்தமமான வஜ்ரம் போலும் அழகிய வேலைப்பாடுகள் உடையதுமான அஸ்திரம் தன்னை நோக்கி வருவதைக் அதிகாயன் கண்டான். தன்னால் முடிந்தவரை ஏராளமான அம்புகளைப் பொழிந்து அதை தடுக்க முயன்றான். ஆனாலும் அந்த அஸ்திரம் அவன் அருகில் வந்து விட்டது. தன் சக்தி, இஷ்டி, குடாரம்,  க3தை4, சூலம், ஹலம், இந்த ஆயுதங்களால் அதைத் தடுப்பதில் கவனமாக இருந்தான். சற்றும் கலங்காமல் தன்னைக் காத்துக் கொள்ள போரிட்டான். அந்த ஆயுதங்களை தவிர்த்தும், அத்புதமான அந்த ஆயுதங்களை சக்தி இழக்கச் செய்தும், ப்ரும்மாஸ்திரம் அவனுடைய தலையை கிரீடத்துடன் அடித்தது. அந்த தலையும், தலைக்கு பாதுகாப்பாக இருந்த கிரீடமும் ஒரு நொடியில் பூமியில் விழுந்தது. மேரு மலையின் சிகரம் ஒன்று நழுவி விழுவது போல இருந்தது. தரையில் விழுந்த தலையிலிருந்து ஆபரணங்கள் சிதறின. இதைக் கண்டு மற்ற ராக்ஷஸர்கள் மிகவும் கலங்கி வருந்தினர். அடி பட்ட சிரமத்தாலும், மன வருத்தத்தாலும் வாடிய முகத்தினராக, பலவிதமாக, அபஸ்வரமாக, உரத்த குரலில் கத்தலானார்கள். தங்கள் நாயகன் இறந்து விட்டான் என்று தெரிந்ததும்,  ஊரை நோக்கி பயத்துடன் ஓட்டம் பிடித்தனர். வானரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மலர்ந்த தாமரை போல முகம் மலர, லக்ஷ்மணனைச் சூழ்ந்து நின்று அவனை பூஜித்தனர். எதிர்க்க முடியாத பலசாலியான எதிரி ஒழிந்தான் என்ற ஆறுதலுடன் வானளாவி நின்ற நெடிய சரீரம் உடைய அதிகாயனை வதம் செய்து போரில் மனம் நிறைந்தவனாக லக்ஷ்மணன் நின்றான். வானர வீரர்கள் புடை சூழ, ராமனிடம் விஷயம் தெரிவிப்பதற்காக எல்லோருமாகச் சென்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அதிகாய வத4: என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 72 (479) ராவண மன்யு சல்யாவிஷ்கார: (ராவணனை மன்யு எனும் கோபம் துளைத்தெடுப்பது)

 

அதிகாயன் இறந்ததைக் கேட்டு, ராவணன் வருந்தினான். லக்ஷ்மணனின் பாணங்களால் அடிபட்டான் என்ற விவரங்களை அறிந்து ராவணன் மனம் கலங்கினான். புலம்பினான்.  தூ3ம்ராக்ஷன் எப்படிபட்ட வீரன். அவனைக் கண்ட எதிரிகள் நடுங்குவார்கள். வில்லாளி.  ஆயுதங்களை பிரயோகம் செய்வதில் வல்லவன் என்று புகழ் பெற்றவன். அகம்பனனும், ப்ரஹஸ்தனும், கும்பகர்ணனும் கூட வீரர்களே. யுத்தம் என்றால் விரும்பிச் செய்வார்கள். எல்லோருமே மகா பலசாலிகள். எதிரி சைன்யத்தை வெற்றி கொள்ளாமல் வந்ததில்லை. இவர்களை ராமன் வீழ்த்தி விட்டான் என்றால் அவன் செயற்கரியன செய்யும் வீரன் தான். பெருத்த உருவமும், சாஸ்திர ஞானமும் உடைய என் ராக்ஷஸ வீரர்கள் மடிந்தார்கள். பல வீரர்கள், சூரர்கள் வதம் செய்யப் பட்டார்கள். புகழ் பெற்ற வீரனான என் மகன் இந்திரஜித் அந்த சகோதரர்களை அஸ்திரத்தால் கட்டினானே. வர பலத்தால் செய்த செயல் அது. இதிலிருந்து சுர, அசுரர்களானாலும் விடுபட முடியாது. பயங்கரமான பந்தனம், அதை யக்ஷ கின்னரர்களும் முறியடித்ததில்லை. என்ன காரணமோ, தெரியவில்லை, இவர்கள் பிரபாவமா? மோகமா? மாயையா?? இந்த சகோதரர்கள் ராம, லக்ஷ்மணர்கள் அந்த சர பந்தனத்தை விலக்கிக் கொண்டு, வெளி  வந்து விட்டார்கள். என் கட்டளைப்படி, போருக்கு புறப்பட்ட என் சிறந்த போர் வீரர்கள் போர்க்களத்தில் மடிந்தனர். இனி, யார் என் பக்கம், ராம லக்ஷ்மணர்களோடு போரிடத் துணிவும், சக்தியும் உள்ளவர்கள், மீதம் இருக்கிறார்கள்? தேடிப் பார்க்க வேண்டும். படை பலத்தோடு, சுக்ரீவனையும், இவனும் நல்ல வீரனே, விபீஷணனும் அங்கு இருக்கிறான். ஆஹா, இந்த ராமன் மகா பலசாலி. அவனுக்கு அஸ்திர பலமும் நிறைய உள்ளது. இவனுடைய விக்ரமத்தின் சகாயத்தால் தான் ராக்ஷஸர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த ராமன் யாராக இருக்கும்? அவனை நர நாராயணனாக எண்ணுகிறேன். இவனிடம் கொண்ட பயத்தால் லங்கை நகரம் தோரணங்கள் இல்லாமல், வாசல்கள் மூடப் பெற்று, பொலிவிழந்து கிடக்கிறது. இந்த நகரத்தை சளைக்காமல் காவல் செய்யக் கூடியவர்களை நியமித்து ரகசியமாக பாதுகாக்க வேண்டும். சீதை இருக்கும் அசோக வனத்தையும் நன்றாக காவல் காக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் வெளியில் சென்றாலும், உள்ளே வந்தாலும் கவனித்துக் கொள்ள வேண்டும். எங்கெங்கு அடர்த்தியான புதர் இருக்கிறதோ, ஆங்காங்கு ஒளிந்து கொள்ளுங்கள். கையில் ஆயுதமும், உங்கள் வீரர்களைக் கூப்பிடு தூரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வானரங்களின் நடமாட்டத்தை கூர்ந்து கவனியுங்கள். மாலை மங்கும் ப்ரதோஷ வேளையிலும், பாதி ராத்திரியிலும் விடியற்காலையிலும், எப்பொழுதும் அலட்சியமாக இருக்க வேண்டாம். எப்பொழுதும் நிற்க வேண்டியிருந்ததா என்ன? இப்பொழுது எதிரியின் நடமாட்டமும், பலமும் தெரிந்து விட்டது. இவ்வாறு ராக்ஷஸ ராஜன் கட்டளையிடவும், அவன் சொன்னபடியே தங்கள் தங்கள் இடங்களைத் தேர்ந்தெடுத்து நின்று கொண்டனர். இவர்களுக்கு உத்தரவிட்டு விட்டு, ஆங்காரமும் கோபமும் தன்னை அம்பாக குத்திக் கிளற, தீனனாக தன் மாளிகையினுள் நுழைந்தான். இறந்து போன தன் மகனை நினைத்து வேதனையும், அதிலிருந்து கிளர்ந்தெழும் கோபமுமாக, ராவணன் நிலை கொள்ளாது தவித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண மன்யு சல்யாவிஷ்கார: என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 73 (480) இந்திரஜித் மாயா யுத்தம் (இந்திரஜித்தின் மாயா யுத்தம்)

 

தேவாந்தகன், நராந்தகன், த்ரிசிர, அதிகாயன் என்று சிறந்த ராக்ஷஸ போர்த் தலைவர்கள் போரில் மடியவும், ஓடி வந்து ராக்ஷஸ படையினர், ராவணனிடம் விவரம் சொன்னார்கள். இதைக் கேட்டு ராவணனின் கண்களில் நீர் மல்கியது. புத்திரர்கள் மடிந்ததையும், சகோதரர்கள் வதம் செய்யப் பட்டதையும் நினைத்து மிகவும் வருந்தினான். சோக சாகரத்தில் மூழ்கி தீனமாக நின்ற ராவணனைப் பார்த்து, ராஜ குமாரனான இந்திரஜித் உற்சாகமூட்டும் விதமாக பேசினான். தந்தையே, மோகம் கொள்ள வேண்டாம். இதோ உங்கள் மகன் இந்திரஜித் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறேன். நான் போய் யுத்தத்தில் அவர்களை கண்ட துண்டமாக விழும்படி செய்து விட்டு வருகிறேன். என் பாணங்களின் கூரிய சக்தி, வேகத்தோடு நான் பிரயோகிக்கும் பொழுது, எதிரில் யார் தான் நிற்க முடியும்? கவலைப் படாதீர்கள். உயிரைக் காத்துக் கொண்டு யார் யார் ஓடுகிறார்கள், பார்ப்போம். இன்று பாருங்கள், என் பாணங்கள் தைக்கப் பெற்று, காயம் அடைந்த உடலுடன் ராம, லக்ஷ்மணர்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். பூமியில் தூங்குவது போல கிடக்கும் பல உடல்கள் உயிரற்ற சடலங்களாக இருப்பதைக் காணத் தான் போகிறீர்கள். இதோ, இந்திர சத்ருவான நான் பிரதிக்ஞை செய்கிறேன்.  இன்றே, ராம லக்ஷ்மணர்களை என் பாணங்களுக்கு இரையாக்குவேன். இன்று இந்திரன், வைவஸ்வதன், விஷ்ணு, மித்ரன், அஸ்வினி குமாரர்கள், வைஸ்வானர, சந்திர, சூரியர்கள் கண்ணால் காணட்டும். பலியின் யாக பூமியில், விஷ்ணு, தன் உக்ரமான பராக்ரமத்தைக் காட்டியது போல, இப்பொழுது நான் என் பராக்ரமத்தை வெளிப்படுத்தப் போகிறேன். இவ்வாறு சூளுரைத்து விட்டு, ராஜாவிடம் விடை பெற்றுக் கொண்டு சற்றும் தளராத மன உறுதியுடன், தன் வாயு வேகத்தில் செல்லும் உயர்ந்த ரதத்தில் ஏறினான். ஸ்ரேஷ்டமான குதிரைகள் பூட்டிய ரதம் புறப்பட்டது. ஹரியின் ரதம் போல மேன்மை பொருந்திய அந்த ரதத்தில் வேகமாக ஏறி இந்திரஜித் யுத்த பூமிக்குச் சென்றான்.

 

கிளம்பி விட்ட அவனைத் தொடர்ந்து மற்ற போர் வீரர்கள் ஓடினர். ஆரவாரம் செய்தபடி, கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். ஒரு சிலர் உயர் ஜாதி குதிரைகளில், வ்யாக்ர (புலி), வ்ருச்சிக(ஓனாய்), மார்ஜார (பூனைகள்) கர (கோவேறு கழுதை), உஷ்டிரம் (ஒட்டகம்) பாம்புகள், வராகங்கள், நாய்கள், சிம்மங்கள், குள்ள நரிகள், பெரிய மலைகள், முயல், ஹம்ஸம், மயூரம், இவைகளைக் கொடியில் அடையாளமாகக் கொண்டு வீரர்கள், கையில் ப்ராஸம், முத்3fகரம், கூரான பரஸ்வதம்,  க3தை4 முதலியவற்றுடன், சங்கம் ஒலிக்க, பே4ரீ நாதம் இவைகளுடன், இந்திரஜித்தைப் புகழ்ந்து செய்த ஜய கோஷமும் சேர, வாழ்த்தியபடி விரைந்து சென்றனர்.

 

சங்கமோ, முயல் குட்டியோ எனும்படி, வெண்மையான வெண் கொற்றக் குடையும், பூரண சந்திரன் ஆகாயத்தில் பிரகாசமாகத் தெரிவது போல (பௌர்ணமிக்கு அடுத்த நாள்) விளங்கினான். உடன் சென்ற வீரர்கள், தங்கத்தால் கைப்பிடி செய்து அலங்காரமாக விளங்கிய சாமரங்களை வீசியபடி சென்றனர். சிறந்த வில்லாளிகள் பலரும் ஒன்று கூடி விட்டனர். பெரும் படையுடன் இந்திரஜித் கிளம்பி விட்டான் என்று தெரிந்ததும், தாங்களாகவே வந்து சேர்ந்து கொண்டனர். ராக்ஷஸாதிபனான ராவணன், தன் மகனைப் பார்த்துச் சொன்னான். நீ ஒப்புவமை இல்லாத அரிய வீரன், அப்ரதிரதன்- யாராலும் எதிர்க்க முடியாத பலம் கொண்டவன், உன்னால் தான் இந்திரனை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த மனிதனான ராமனைக் கொல்ல என்ன கஷ்டம். இவ்வாறு சொல்லி, பலவிதமாக ஆசிகளையும் வழங்க, அவற்றை ஏற்றுக் கொண்டு இந்திரஜித், ஆகாயத்தில் பிரகாசிக்கும் சூரியன் பிரகாசமாக பவனி வருவது போல லங்கா நகரில் பவனி வந்தான்.  யுத்த பூமியை வந்தடைந்தான்.

 

ரதத்தின் முன்னால் ராக்ஷஸர்கள் ஹோம குண்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர்.   தானே அக்னி போல ஜ்வலித்துக் கொண்டிருந்த இந்திரஜித் அக்னியில் முறைப்படி, செய்ய வேண்டிய கிரமப்படி ஹோமம் செய்தான். நெய், பொரி முதலிய ஸம்ஸ்காரங்களுடன், மாலைகள் அணிவித்து, தூப தீபம் காட்டி, பூஜை செய்தான். சஸ்திரங்களையும், அம்புகளையும், சமித்துக்களையும், சிவந்த வஸ்திரங்களையும், கருப்பான கரண்டியையும் அக்னியில் சமர்ப்பித்து, சரபத்ரங்களுடனும், தோமரங்களுடனும் (ஆயுதங்கள்) ஒரு பெண் ஆட்டின் தலையை, உயிருடன் பலி கொடுத்து, ஹோமங்கள் செய்ய, உடனே புகையின்றி கொழுந்து விட்டெரிந்த அக்னி, பிரதக்ஷிணமாக சுழன்று எரிந்து, வெற்றியைக் குறிக்கும் நிமித்தங்கள் தெரிந்தன. ஆசிர்வதிக்கும் விதமாக, சொக்கத் தங்கமாக ஜ்வலித்த அக்னியின் ஜ்வாலைக்களுக்கிடையில், அக்னி பகவான் தானே வந்து ஹவிஸைப் பெற்றுக் கொண்டான். இந்திரனின் விரோதியான இந்திரஜித், ப்ரும்மாஸ்திரத்தை தன் ரதம், தன்னை, என்று சகலத்தையும் அக்னிக்கு சமர்ப்பித்தான். இவ்வாறு ஆத்ம சமர்ப்பனம் செய்து அக்னியில் ஹோமம் செய்த பொழுது சூரியன், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், சந்திரன் இவற்றுடன் ஆகாயம் நடுங்கியது. தானும் அக்னிக்கு சமமான தேஜஸ் உடையவன், அக்னியில் ஹோமம் செய்து, இந்திரனுக்கு சமமான பிரபாவத்துடன் தன் கை வில், பாணங்கள், கத்தி, ரத, அஸ்வ, சாரதி அனைத்துமாக ஆகாயத்தில் மறைந்து விட்டான்.

 

நினைத்து பார்க்க முடியாத பராக்ரமம் உடைய வீரனான இந்திரஜித் ஆகாயத்தில் தன்னை மறைத்து நின்று கொண்டான். இதன் பின் குதிரைகள், ரதங்கள் நிறைந்த ராக்ஷஸ சேனை, ஆட்டமும் பாட்டமுமாக உற்சாகத்துடன் முன்னேறியது. பல விதமான கூரான பாணங்களாலும், தோமரங்களாலும், அங்குசங்களாலும் யுத்தத்தில் வானரங்களை அடித்தனர். இந்திரஜித் அவர்களைப் பார்த்து நீங்கள் உங்கள் இஷ்டப்படி வானரங்களைக் கொன்று குவியுங்கள்.  உங்களை நான் பாதுகாக்கிறேன் என்று உறுதி அளித்திருந்தான். அந்த தைரியத்தில் விஜய கோஷம் செய்த படி ராக்ஷஸர்கள், வானர சைன்யத்தை கதி கலங்க அடித்தனர். சர மழையாக பொழிந்தார்கள். கையில் மரக்கிளைகளே ஆயுதமாகக் கொண்ட வானரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல், ஓடி ஒளிந்தனர். இந்திரஜித்தும் ஒரு பாணத்தால் ஐந்து, ஏழு, என்று வானர வீரர்களை வீழ்த்தினான். இந்திரஜித் தந்த பலத்தில் ராக்ஷஸர்கள், முன் ஒரு சமயம் தேவர்களை வாட்டி எடுத்தது போல வானர சைன்யத்தை நாசம் செய்யலாயினர்.

 

பயங்கரமான, சூரிய கிரணங்களுக்கு இணையான உக்ரமான பாணங்களால் அடிக்கப் பட்ட வானரங்கள் உடல் முழுவதும் காயத்தோடு, சிதைந்த உடல் பாகங்களோடும் நினைவிழந்து விழுந்தன.  பாறைகளைக் கொண்டும், கிளைகளுடன் பிடுங்கிக் கொண்டு வந்த மரங்களின் அடிப் பாகத்தாலும் முடிந்தவரை, எதிர்த்தனர். இதனால் அடிபட்டும் ராக்ஷஸ வீரர்கள் கணிசமாக மாண்டனர். ராவணன் மகன், தானே பதினெட்டு சரங்களை கந்தமாதனன் பேரிலும், ஒன்பது சரங்களை நலன் பேரிலும், ஏழு பாணங்களை மைந்தனின் மர்மஸ்தானத்திலும், ஐந்து கூரிய பாணங்களை கஜன் பேரிலும், பிரயோகித்து அவர்களை காயப்படுத்தினான்.  ஜாம்பவான் பேரில் பத்து பாணங்கள் நீலனின் மேல் பதிமூன்று, சுக்ரீவனையும், ரிஷபனையும், அங்கதனையும் த்விவிதனையும், வரத்தால் கிடைக்கப் பெற்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான். மற்ற வானரங்களையும், பல விதமாக சர மழையாக பொழிந்து பயந்து அலறி ஓடச் செய்தான். காலாக்னி தன்னை மறந்து தாண்டவம் ஆடுவது போல கோரமாக ஆத்திரத்துடன் வெறி கொண்டவன் போல வானரப் படையை நாசம், செய்தான். செய்வதறியாது  மயங்கிய வானரங்கள், பலர் விழுந்தனர். பலர் காயமடைந்தனர். எஞ்சியிருந்தவர் கலங்கினர். அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் காயம் பட்டதோடு ரத்தம் கொட்ட நின்றதை ராவணாத்மஜன் மகிழ்ச்சியோடு பார்த்தான்.

மேலும் வேகமாக அஸ்திரங்களையும், சஸ்திரங்களையும் ஏகமாக வர்ஷித்து வானர கூட்டத்தை அடித்தான். மகா பலசாலியான இந்திரஜித்தின் முன் நிற்கத் திராணியில்லாமல் வானரங்கள் நடுங்கின. கார் மேகம் நீரை பொழிவது போல, யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஆகாயத்திலிருந்து பாண மழை பொழிந்தான். சக்ரஜித் (இந்திரனுடைய மற்றொரு பெயர் சக்ரன்- அவனை ஜயித்தவன்), எனும் ராவணன் மகன், பாணங்களால் பலத்த காயம் அடைந்த வானரங்கள் அழுது, அரற்றிக் கொண்டு நின்றனர். இந்திரன் கையில் வஜ்ராயுதத்தோடு, மலைகளின் இறக்கைகளை வெட்டிய பொழுது, பொத்து, பொத்தென்று அவை விழுந்தது போல நாலா புறமும் ராவணியின் பாணங்களே இடை விடாது விழுந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.  சுரேந்திர சத்ருவான, இந்திரஜித் இருக்கும் இடமே தெரியவில்லை. மாயையால் மறைந்து நின்று கொண்டான். வானரங்கள் திகைத்து நிற்கையிலேயே நெருப்புக் கனல் பறக்கும் கூரிய பாணங்களால் ஆகாயமே மறைந்து விடும்படி, வலை பின்னியது போல பின்னி விட்டான். சுக்ரீவனின் சைன்யம் அவனுடைய விசித்ரமான போர் முறைகளாலும், சூலம் பரஸ்வதம், இவைகளை இடைவிடாது பிரயோகித்ததாலும் தவித்தது.  வானர வீரர்கள் வாட்டி எடுக்கப் பட்டனர்.  நெருப்பு போன்ற ஒளியுடன் கூடிய கூர்மையான பாணங்களால் அடிபட்ட வானரங்கள் கிம்சுக புஷ்பங்கள் மலர்ந்தது போல சிவந்து காணப்பட்டன.  ஒருவரையொருவர் நெருங்கி நின்று கொண்டனர். சில ஆகாயத்தைப் பார்த்த படி நிற்க, பல அடிபட்டு விழுந்தன. சிலருக்கு கண்களில் அடி, ஓடி தப்பிக்க முயன்றாலும், எங்கிருந்தோ வந்த பாணங்கள் மேலே பட்டு காயப்படுத்தியது. மந்திரங்கள் சொல்லி, யாரென்று கூட பாராமல் இந்திரஜித் தன் சரங்களை எய்து கொண்டே யிருந்தான். ஹனுமான், சுக்ரீவன், அங்கதன், கந்தமாதனன், ஜாம்பவான் சுஷேணன், வேக33ர்ஸி, மைந்தன், த்விவிதன், நீலன், க3வாக்ஷன், க3ஜ, கோ3முகர்கள், கேஸரி, ஹரிலோமா, வித்யுத் தம்ஷ்டிரன், சூரியானனன். ஜ்யோதி முகன், ததி4 முகன், ஹரி, பாவகாக்ஷன், நலன், குமுதன் என்று எல்லோருமே இந்திரஜித்தின் முன் தடுமாறினர். இப்படி, பாணங்களின் வர்ஷத்தாலும்,  க3தை4யை இடை விடாமல் சுழற்றியதாலும், வானர வீரர்கள் பயந்து நடுங்கி ஓடி ஒளியலானார்கள். இதன் பின் இந்திரஜித் ராம, லக்ஷ்மணர்களைத் தாக்க ஆரம்பித்தான். எங்கிருந்தோ, நீர் தாரை போல விழும் அம்புகளைப் பார்த்து ராமர் லக்ஷ்மணனுடன் ஆலோசனை நடத்தினார்.  லக்ஷ்மணா, இந்த ராவணன் மகன், ப்ரும்மாஸ்திரத்தால் வானர வீரர்களை தாக்கி விழச் செய்து விட்டு, நம்மைத் தாக்க ஆரம்பித்திருக்கிறான்.  இவனுக்கு ஸ்வயம்பூ வரங்கள் கொடுத்திருக்கிறார். தன் பெரிய சரீரத்தையே அந்தரிக்ஷத்தில் மறைத்துக் கொண்டிருக்கிறான். இந்த யுத்தத்தில் இவனை எப்படி சமாளிப்பது? சரீரமாக எதிரில் இல்லாத பொழுது நாம் எந்த இடத்தில் குறி வைத்து அடிப்போம். அவன் கையிலும் அஸ்திரங்கள் உள்ளன. ஸ்வயம்பூ பகவான், இவனுக்கு நினைத்து பார்க்க முடியாத ப்ரபாவத்தையும், அஸ்திரங்களையும், கொடுத்திருக்கிறார்.   புத்திசாலித் தனமாக, லக்ஷ்மணா, இந்த பாண வர்ஷத்தை என்னுடன் கூட இருந்து பொறுத்துக் கொள். நாலா திசைகளிலும் இவன் தன் பாணங்களால் வலையாக பின்னி ஆகாயமே தெரியாதபடி மறைத்து வைத்திருக்கிறான். சூரனான எதிரி கையில் அடிபட்டு வானர வீரர்கள் விழுந்து கிடக்கின்றனர். நம் இருவரையும் நினைவிழந்து போகச் செய்து நிச்சயம் இவன் தேவலோகம் போவான். அங்கு இந்திரனையும் வீழ்த்தி லக்ஷ்மியை ஜயித்து, தன் பக்கம் ஆக்கிக் கொண்டவனாக, தானே இந்திர பதவியில் அமருவான்.  இப்படி பேசிக் கொண்டு மேற்கொண்டு செய்வதைப் பற்றி யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே, இந்திரஜித் அவர்கள் இருவரையும் தாக்கி மூர்ச்சையாகச் செய்து விட்டு, திடுமென, லங்கையினுள் நுழைந்து விட்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திரஜித் மாயா யுத்தம்: என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 74 (481) ஔஷதி4 பர்வதானனம் (ஔஷதி மலையைக் கொண்டு வருதல்)

 

யுத்த பூமியில், ராம லக்ஷ்மணர்கள் இருவரும் நினைவிழந்து கிடப்பதைக் கண்ட வானரங்கள் செய்வதறியாது திகைத்தன. சுக்ரீவன், நீலன், அங்கத, ஜாம்பவன் முதலானோர் வேதனை நிறைந்த மனத்தோடு, இருந்ததை விபீஷணன் கண்டான். வானர ராஜனான சுக்ரீவனைப் பார்த்து சமாதானம் செய்து, நல்ல வார்த்தை சொல்லி தேற்றினான். பயப்படாதே. இது நாம் வருந்தி கை கட்டி செயலிழந்து நிற்கும் நேரம் அல்ல. ஆர்ய புத்திரர்கள் இருவரும் அடிபட்டு நினைவிழந்து கிடக்கின்றனர். ஸ்வயம்பூ தந்த வரம், அவன் சேமித்து வைத்துள்ள அஸ்திரங்கள், நல்ல சக்தி வாய்ந்தவை. தங்கள் வீர்யத்தைக் காட்டுகின்றன. அமோகமான இந்த ப்ரும்மாஸ்திரம் தான் அவனிடம் உள்ள மிகச் சிறந்த ஆயுதம். இந்த அஸ்திரத்திற்கு மரியாதை தரும் விதமாக ராஜ குமாரர்கள் அதன் வீர்யத்திற்கு கட்டுப்பட்டு விழுந்து கிடக்கின்றனர். இதில் நாம் கவலைப் பட என்ன இருக்கிறது. மாருதியும், ப்ரும்மாஸ்திரத்திற்கு தலை வணங்கியவனாக விபீஷணன் சொன்னதைக் கேட்டு, இந்த வானர சைன்யத்தில் அடிபட்டு வீழ்ந்தவை தவிர மற்ற உயிருடன் இருக்கும் வீரர்களைத் தேடி சமாதானம் சொல்வோம் என்று கிளம்பினான்.

 

இதன் பின் ஹனுமானும், ராக்ஷஸ உத்தமனான விபீஷணனும் சேர்ந்து, கையில் தீவட்டியை எடுத்துக் கொண்டு அந்த இரவில் யுத்த பூமியில் சஞ்சரித்தனர். வால் அறுபட்டு, கை கால்கள் இழந்தவர்களாக, விரல்கள், கேசம் இவைகளை இழந்தவர்களாக, உடலிலிருந்து பெருகும் ரத்த வெள்ளத்தில் மூழ்கி நனைந்தவர்களாக, வேதனையும் முனகலுமாக, பெரிய சரீரத்துடன், மலை போல் விழுந்து கிடந்தவர்களை, தேடித் தேடி சமாதானம் செய்தனர்.  சுக்3ரீவன், அங்க33ன், நீலன், சரப4ன், க3ந்த4 மாத3னன், க3வாக்ஷன், சுஷேணன் என்று பிரஸித்தி பெற்ற பல வானர வீரர்களைக் கண்டனர். அடிபட்டு கிடந்தவர்களில், மைந்த3ன், த்3விவிதன், நலன், ஜோதி முகன், பனஸன் முதலானோரும் இருக்கக் கண்டனர். அறுபத்து ஏழு கோடி வானரர்கள் இறந்து கிடந்தனர். ஒரு நாளில் ஐந்தில் ஒரு பாக நேரத்தில் ஸ்வயம்பூ வல்லபனான இந்திரஜித்தின் பாணத்தால் (ப்ரும்மாஸ்திரத்தால்) சமுத்திரம் போல பரந்து கிடந்த வானர வீரர்களின் அடிபட்ட உடல்கள் சிதறிக் கிடக்க, விபீஷணனும், ஹனுமானும் ஜாம்பவானைத் தேடி அலைந்தனர். இயல்பான, வயது முதிர்ந்த காரணத்தால் தோன்றிய நரை முடியும், நூறு பாணங்களால் தைக்கப் பெற்று, அணையும் தறுவாயிலிருந்த நெருப்பு போல கிடந்த ப்ரும்மாவின் புத்திரனான ஜாம்பவானை, விபீஷணன் கண்டான். புலஸ்திய வம்சத்தில் தோன்றிய விபீஷணன் அவர் அருகில் சென்று விசாரித்தான். ஆர்ய, இந்த பாணங்கள் தங்கள் உயிரைக் குடிக்கவில்லையே? விபீஷணன் குரலைக் கேட்டதும், ஜாம்பவான், மிகக் கஷ்டப்பட்டு, தலையை தூக்கிப் பார்த்து, குரலால் நீ விபீஷணன் என்று தெரிந்து கொண்டேன். விபீஷணா, என் கண்களால் உன்னை பார்க்க முடியவில்லை. இந்த கூரான அம்புகள் பட்டு, வேதனை தாங்க முடியவில்லை. அஞ்சனை மகன், அந்த ஹனுமான் உயிருடன் இருக்கிறானா? தெரியுமா? நைருத ( ராக்ஷஸனே,) அந்த வானர ஸ்ரேஷ்டன் எங்கே?

 

ஜாம்பவான் சொன்னதைக் கேட்டு, விபீஷணன் சற்று ஆச்சர்யத்தோடு வினவினான். ஆர்யபுத்ரா, மற்ற எல்லோரையும் விட்டு ஹனுமானை ஏன் விசாரிக்கிறீர்கள்? ராஜா சுக்ரீவனையோ, அங்கதனையோ, ராகவர்களையோ, இவர்களிடம் இந்த கவலையைக் காட்டவில்லையே. வாயு புத்திரன் எந்த விதத்தில் உயர்த்தி. அவன் இருக்கிறானா என்று அக்கறையுடன் கேட்கிறீர்களே, இதைக் கேட்டு ஜாம்பவான் பதில் அளித்தார். கேள் விபீஷணா, எதனால் ஹனுமானைத் தேடுகிறேன் சொல்கிறேன், கேள். அந்த வீரன் ஹனுமான் உயிருடன் இருந்தால் நம் படை வீரர்கள் அடிபட்டு விழுந்திருந்தாலும் கவலையில்லை. உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையும், வைஸ்வானரனுக்கு சமமான வீர்யம் உடைய ஆஞ்சனேயன் உயிருடன் இருந்தால் தான் நமக்கும் இருக்கும். உடனே ஹனுமான் முன் வந்து,. வயதான ஜாம்பவானின் பாதங்களை பிடித்துக் கொண்டு வணங்கி நின்றான். ஹனுமானின் குரலைக் கேட்டவுடன், அந்த இக்கட்டான உடல் உபாதையின் நடுவிலும், ஜாம்பவானின் முகம் மலர்ந்தது. தன் ஆத்மாவை திரும்பக் கண்டது போல மகிழ்ந்தார். மகா தேஜஸ்வியான ஹனுமானைப் பார்த்து ஜாம்பவான் வா, வா, ஹரி சார்தூலா,வா.  வானரங்களைக் காப்பாற்ற வா.  வேறு யாராலும் இந்த ஆற்றலைக் காட்ட முடியாது. நீ தான் இவர்களுக்கு உயிர் தோழன். இதை விட சிறந்த சமயம், சந்தர்பம், உன் ஆற்றலை வெளிப்படுத்த கிடைப்பதும் அரிது. கரடிகள், வானரங்கள் நிறைந்த இந்த சைன்யத்தை சந்தோஷப்படுத்து. சல்லடையாக துளைக்கப் பெற்ற இந்த ராம லக்ஷ்மணர்களின் உடலிலிருந்து இவைகளை நீக்கி, உடல் நலம் பெறச் செய்.  சாகரத்தின் மேல், அதற்கும் மேல் சென்று அத்வானமான இடங்களைக் கடந்து ஹிமயமலை செல். உத்தமமான அந்த மலைக்குச் சென்று, அதன் மிக உயரமான சிகரம் பொன் மயமாக காட்சித் தரும். ரிஷபம் என்ற இந்த சிகரத்தையும் கைலாஸ சிகரத்தையும் காண்பாய். இந்த இரண்டு சிகரங்களூக்கும் இடையில் ஒப்பில்லாத பிரபையுடன் கூடிய ஔஷதிகள் நிறைந்ததுமான ஔஷதி பர்வதத்தைக் காண்பாய். இதன் உச்சியில் நான்கு விதமான ஔஷதிகள் வளர்ந்திருக்கும். இந்த (ஔஷதி) மருந்துச் செடிகளை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். பள பளவென்று மின்னும் இந்த பச்சிலைகள், திசைகளையே பிரகாசமாக ஆக்குவது போல தெளிவாகத் தெரியும்.  ம்ருத சஞ்சீவினி (இறந்தவனை உயிர்பித்தல்) நிசல்யகரணிம் (சல்யம்-ஆயுதம் தாக்கியதை நீக்கி காயத்தை குணமாக்குவது) சாவர்ண்ய கரணீம் (நிறம் மாறாமல் செய்தல், பழையபடி உடல் நிறம் பெறச்செய்தல்)  சந்தான கரணீம் (முறிந்து போன சரீர அவயவங்களை இணைத்தல்) இவைகளை எடுத்துக் கொண்டு வேகமாக வா. (கந்தவாஹன் என்று வாயுவுக்கு பெயர். மணம், அல்லது வாசனை இதை சுமந்து கொண்டு போகும் இயல்புடையவன்) அந்த வாயு புத்திரனே, இவைகளைக் கொண்டு வந்து இங்கு நம் வீரர்களின் உயிர் பிழைப்பிக்கச் செய். ஆறுதல் அளிப்பாய், ஹனுமானே.

 

ஜாம்பவான் சொன்னதைக் கேட்டு, ஹனுமான் சமுத்திரத்தின் ஜல வேகத்திற்கு இணையாக தன் உடல் பலத்தை விருத்தி செய்து கொண்டான். சமுத்திரக் கரையிலிருந்து பர்வதத்தை மிதித்து ஒரு எம்பு எம்பி, நின்ற பொழுது, மலைக்கு மேல் மற்றொரு மலை நிற்பது போல இருந்தது. இந்த வானரத்தின் பாதங்களால் மிதி பட்டு அந்த மலை வருந்தியது. மிகவும் கஷ்டப் பட்டு பொறுத்துக் கொள்வது போலத் தோன்றியது. அதன் மேல் இருந்த மரங்கள், தப தபவென்று விழுந்தன. சில விழும் வேகத்தில் உரசி பற்றிக் கொண்டு பிரகாசமாகத் தெரிந்தன. ஹனுமான் வேகமாக உதைத்து கிளம்பியதில் மலைச் சிகரமே ஆட்டம் கண்டது. மலையின்  ஆட்டத்திலும், மரங்கள் கீழே விழும் வேகத்திலும், வானரங்கள் தவித்தன. மகாத்வாரம் எனும் நுழை வாயிலில் ஆட்டம் காண, வீடுகள், மாளிகைகள் நில நடுக்கத்தால் பீடிக்கப் பட்டது போல ஆட்டம் காண, லங்கா நகரமே பயந்து நாட்டியமாடுவது போல காட்சியளித்தது.  தானே, (ப்ருத்வீ தரன்) மலை மேல் நின்று கொண்டு, (தரணீதரம்) தான் ஏறி நின்ற மலையை அழுந்த மிதித்துக் கொண்டு கிளம்பிய ஹனுமான் சமுத்திரத்தை உள்ளடக்கிய பூமியை வருந்தச் செய்தான். அந்த மலய மலையின் மேல், மேரு மலையில் நிற்பது போல, சுற்றிலும் அருவிகள் நிரம்பி வழிய, பல விதமான மரங்கள் பூக்கள் மலர்ந்து அழகாக காணப்பட,  ஆங்காங்கு குளங்களில் கமலமும், உத்பலமும் சேர்ந்து காட்சியளிக்க, அறுபது யோஜனை உயரத்தில், தேவ கந்தர்வர்கள் வசிக்கும் இடமாக, வித்யாதரர்களும், முனி கணங்களும், அப்ஸரஸ்த்ரீகளூம் வாழும் இடமாகவும், யக்ஷ, கந்தர்வ, கின்னரர்களையும், பலவிதமான மான்கள், மிருகங்கள் நிறைந்ததும், குகைகளில் வசிக்கும் பல்வேறு விதமான ஜீவாராசிகளும் நிறைந்திருக்க, இவர்கள் அனைவரையும் கலங்கச் செய்த படி ஹனுமான் மேகம் போல வளர்ந்தான். வடவாக்னி போன்ற வாயைத் திறந்து, பெரும் குரலில் கோஷமிட்டுக் கொண்டு, ராக்ஷஸர்களை பயமுறுத்தியபடி, பாதங்களால் மலை மேல் உதைத்து எம்பி குதித்தபடி, ராமனை தியானித்து நமஸ்கரித்து, ராம காரியமாக கிளம்பினான். அவனுடைய உரத்த குரலின் ஆக்ரோஷத்தாலேயே குலை நடுக்கம் கொண்ட ராக்ஷஸர்கள் கண் இமைக்கவும் மறந்தனர். பெரிய நாகம் போன்ற தன் வாலை உயரத் தூக்கி, குனிந்து முதுகை வளைத்து, காதுகளை மூடிக் கொண்டு, வடவா முகம் போன்ற வாய், முகத்தை தூக்கி, நிமிர்ந்து சண்ட வேகத்தில் ஆகாயத்தில் தாவி குதித்து பறக்கலானான். கூட்டமாக அடர்ந்து வளர்ந்திருந்த பெரிய மரங்களும் ஆட்டம் கண்டன. மலையின் பெரும் கற்கள் நகர்ந்து இடம் பெயர்ந்து விழலாயின. அந்த இடத்தில் வாசம் செய்த வானரங்கள், தங்கள் கைகள் கால்களின் பலம் இழந்தவர்கள் போல நீரில் விழுந்தனர். உரகம், போகம் (இரு விதமான பாம்பு இனத்தின் பெயர்கள்)  போன்ற தன் புஜங்களையும் தூக்கி, பு4ஜங்கா3ரி – பாம்புகளுடைய விரோதியான கருடன் போன்ற வேகத்துடன், மேருவை நோக்கி பிரயாணமானான். நகராஜன், மலையரசன், என்று வர்ணிக்கப்படும் மேரு மலையை, வடக்கு திசையை கலக்கி எடுப்பது போல வாயு புத்திரன் மகா வேகமாக சென்றான். சமுத்திரம், அலைகள் எழும்பி குதிக்க, அதன் ஜீவ ஜந்துக்கள் எல்லாம் பயந்து இங்கும் அங்குமாக நெளிந்து அலை பாய, பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, விஷ்ணுவின் கையிலிருந்து விடு பட்ட சக்கரம் போல நொடியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான். அவன் மலைகளை, மரங்களின் கூட்டத்தை குளங்களை, நதிகளை, தடாகங்களை, உத்தமமான நகரங்களை, பெரிய விசாலமான ஜனங்கள் நிறைந்த இடங்களையும் கண்டபடி, வேகமாக தன் தந்தையுடன் போட்டியிடுவது போல சென்றான். ஆதித்யனின் வழியை அடைந்து சிறிதும் சிரமமின்றிச் சென்றான். ஹரி சார்தூலன், ஹனுமான் சென்ற வழியெல்லாம், அவனுடைய ஜய கோஷம் நிறைத்தது. ஜாம்பவானின் சொல்லை மனதில் உருப் போட்டபடி, வேகமாக சென்ற வாயு புத்திரன், திடுமென எதிரில் ஹிமயமலை தெரியக் கண்டான். பல பெரிய குகைகளும், அருவிகளும், சிறு நீர் வீழ்ச்சிகளும், வெண்மையான மேகம் போன்ற சிகரங்கள் அழகாகத் தெரிய, கண்களுக்கு விருந்தாக நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த பல மரங்களைக் கண்டான்.  ரம்யமான இமயமலைச் சாரலை, மலையரசனைக் கண்டான். அந்த மலையை அடைந்ததும், சுற்றிலும் நோக்க, உத்தமமான ஹேம ச்ருங்கங்கள் (சிகரங்கள்) புண்யமான பல ஆசிரமங்களையும், சுர, ரிஷி கூட்டங்களையும் மகான்கள் சேவிக்கும் பல இடங்களையும் கண்டான். ப்ரும்ம கோசம், ரஜதாலயம், சக்ராலயம், ருத்ர சர ப்ரமோக்ஷம், ஹயானனம், ப்ரும்ம சிரஸ், இவைகள் பிரகாசமாக, வைவஸ்வத கிங்கரர்கள் சூழ இருந்த இடங்களைக் கண்டான். வஜ்ராலயம், வைஸ்வரனாலயம், சூர்ய ப்ரபம், சூர்ய நிபந்தனம், மற்றும் ப்ரும்மாஸனம், சங்கர கார்முகம், வசுந்தராவின் நாபி, எனப்படும் இடத்தையும், ரிஷபம், காஞ்சன சைலம், இவைகளையும், அதன் மேல் பிரகாசமாகத் தெரிந்த எல்லா ஔஷதிகளும் நிறைந்து பள பளத்த, சர்வௌஷதி பர்வதம் என்பதையும் கண்டான். தீயின் நாக்குகள் போலத் தெரிந்த அந்த மருந்து பச்சிலைகளை கண்ட வாயு புத்திரன், யோசித்து அந்த ஔஷதிகள் இருக்கும் இடத்தைச் சுற்றி வந்தான். பல யோஜனை தூரம் கடந்து, திவ்ய ஔஷதிகளை தாங்கிய சிகரத்தை அடைந்தவன் தேடினான். அந்த ஔஷதிகள் அனைத்தும், அந்த மலையில் இருந்த மருந்து பச்சிலைகள் அனைத்தும், தங்களைத் தேடி ஒருவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும்,கண்களுக்கு புலப்படாமல் மறைந்து கொண்டன. அவைகளை காணாமல் ஹனுமான் பெரும் கோபம் கொண்டான். கோபத்துடன் உரக்க அழைத்தான். திடுமென மறைந்த செய்கையை பொறுக்க முடியாமல் மலையரசனைப் பார்த்து இது என்ன? நம்ப முடியாதபடி செய்கிறாய்? ராகவனிடத்தில்  உனக்கு அக்கறை யில்லையா? நகேந்திரனே இதோ என் புஜ பலத்தைப் பார். உன்னிடமிருந்து மருந்து பச்சிலைகள் உள்ள இடத்தை பிடுங்கிக் கொண்டு போகிறேன் பார், என்றான். இதன் பின் அந்த சிகரத்தை, அதன் மரங்களுடனும், அதில் வசித்த நாகங்கள், யானைகள், மற்ற மிருகங்களோடு, காஞ்சனம் மற்றும் பல விதமான தாதுப் பொருட்களோடு, ஆயிரக்கணக்கான தாதுக்கள் மண்டிய அந்த மலையை, உச்சியிலிருந்து பரவி, பிரகாசமாக விளங்கிய மலைச்சாரலை, வேகமாக பிடுங்கி எடுத்துக் கொண்டு, அதே வேகத்தில் கிளம்பினான். சுரர்கள், மற்ற தேவர்கள் பார்த்து பயந்தபடி நிற்கையிலேயே, அதை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் தாவி பறக்கலானான். கருடனுக்கு இணையான வேகத்தோடு, ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பலரும் ஸ்தோத்திரம் செய்ய, திரும்பிச் சென்றான். வந்த படியே ஆதித்யனின் வழியை தேர்ந்தெடுத்து, பாஸ்கரனின் மார்கத்தில், பாஸ்கரன் போலவே ஒளி வீசிய மலைச் சிகரத்தை கையில் ஏந்தியபடி, சூரியனின் ஒளி பட்டு தானும் மற்றொரு பாஸ்கரனோ எனும் ஐயத்தைக் கிளப்பிய படி சென்றான். அந்த மலை அவனுக்கு சோபையைக் கொடுத்தது. மலையை உவமையாக சொல்லக் கூடிய சரீர அமைப்பைப் பெற்றவன், மற்றொரு மலையை கையில் தூக்கியபடி, சென்றது கண் கொள்ளா காட்சியாக விளங்கியது. ஆயிரம் ஆரங்களுடைய விஷ்ணுவின் கைச் சக்கரம், அதை விஷ்ணு பகவான் தானே விரல்களால் சுழற்ற, பற்றிக் கொண்டு எரிவது போல இருந்தது. தூரத்தில் வருவதைக் கண்டே வானரங்கள் மகிச்சி ஆரவாரம் செய்தன. இவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்டு லங்கா வாசிகள் ஏதோ ஆபத்து என்று எண்ணி திகைத்தனர். வானர சைன்யத்தின் மத்தியில் அந்த மலையை வைத்து அதன் மேல் தடாலென்று இறங்கி நின்றான் ஹனுமான். விபீஷணனைப் பார்த்து அணைத்துக் கொண்டு, மற்ற வானரத் தலைவர்களை வணங்கி நின்றான். அந்த இரு மனித ராஜகுமாரர்கள், அந்த மலையிலிருந்து ஔஷதிகளின் வாசனையை நுகர்ந்து தங்கள் உடலில் தைத்த அம்புகள் விலக, காயங்கள் குணமடைய, உற்சாகமாக எழுந்து நின்றனர். சுற்றியிருந்த வானர வீரர்கள் உரத்த குரலில் ஜய கோஷம் செய்தனர். காயம் அடைந்து விழுந்து கிடந்த மற்ற போர் வீரர்களும் உடல் குணமடையக் கண்டனர். எல்லோருமே, தங்கள் உடலில் குத்தியிருந்த ஆயுதங்கள் அகல, காயங்கள் குணமாகி அந்த ஔஷதி மலையின் வாசனையை நுகர்ந்த மாத்திரத்தில், உயிரிழந்த நிலையில் இருந்த பலரும் தூங்கி எழுந்தது போல எழுந்து கொண்டனர்.   கபிகளும் (வானரங்களும்) ராக்ஷஸர்களும், யுத்தம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து தன் கௌரவத்திற்காக, ராவணனின் கட்டளைப்படி, வானர வீரர்களால் கொல்லப் பட்ட ராக்ஷஸ வீரர்களின் உடல்களை, அவ்வப்பொழுது, விழ, விழ, சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டிருந்தனர் அதனால், இந்த ஔஷதி மலையின் பச்சிலை வாசனை வானர வீரர்களின் சடலங்களையும் உயிர் பெறச் செய்த பொழுது, அதன் பலன் அவர்களுக்கு கிட்டவில்லை. பிழைத்து எழுந்த வானரங்கள் மேலும் புத்துணர்ச்சியும், பலமும் பெற்றவர்களாக எழுந்த பின், அந்த மலையை திரும்பவும் ஹிமய மலையிடமே சேர்ப்பித்து விட்டு ஹனுமான் ராம லக்ஷ்மணர்களிடம் வந்து நின்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஔஷதி4 பர்வதானனம்: என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: